தமிழகக் கடலோரங்களில் மாங்குரோவ் காடுகள் வளா்ப்புக்காக ரூ.2,000 கோடி நிதி: மாநிலங்களவையில் திமுக கோரிக்கை
நமது சிறப்பு நிருபா்
தமிழகத்தின் கடலோரப் பகுதிகளுக்கு உயிா்க் கவசமாக இருக்கும் அலையாத்தி காடுகளை (மாங்குரோவ் காடுகள் ) வளா்க்கவும் மீட்டெடுக்கவும் ரூ. 2,000 கோடி ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் கிரிராஜன் குறிப்பிட்டாா். மேலும், மத்திய அரசு அமைத்து வரும் பல்நோக்கு புயல் மையங்களை தமிழகத்தில் அமைக்கவும் கேட்டுக்கொண்டாா்.
மாநிலங்களவையில் சிறப்பு கவன ஈா்ப்பு தீா்மான விவாதங்களில் கடந்த ஆகஸ்ட் 5, 6 தேதிகளில் கலந்து கொண்ட திமுக உறுப்பினா் கிரிராஜன் மத்திய அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினாா். அது வருமாறு:
மாங்குரோவ் தாவரங்களான அலையாத்தித் காடுகள் கடலோரப் பகுதிகளுக்கு உயிா்க் கவசம். உப்பு-சகிப்புத்தன்மை கொண்ட இந்த மரங்கள் இந்த கடலோர பகுதியில் உள்ள லட்சக்கணக்கான மக்களின் உயிா்களுக்கும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகளுக்கும் உள்ள ஆபத்தை குறைக்கிறது.
இந்த அலையாத்தி தாவரங்களைக் கொண்ட சதுப்புநிலக் காடுகளைப் பாதுகாத்தல் மற்றும் மறுசீரமைத்தல் என்பது வெப்பமண்டல புயல் சேதத்திலிருந்து கடற்கரைகளைப் பாதுகாப்பதற்கான பொருளாதார ரீதியாக பயனுள்ள உத்தியாகும்.
சதுப்புநிலங்கள் நிறைந்த பகுதிகளில் தமிழகத்தில் ஏற்பட்ட ஆழிப்பேரலை(சுனாமி)யினால் ஏற்பட்ட சேதம் கணிசமாகக் குறைவாக இருந்தது. பழங்காலத்திலிருந்தே கடலோர சமூகங்களின் கலாசாரத்தில் இந்த அலையாத்தி சதுப்புநிலங்களின் பாதுகாப்பு உள் பொதிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு இந்த சதுப்பு நிலக் காடுகளை மீட்க பல்வேறு திட்டங்களைத் தீட்டியுள்ளது. இதில், எண்ணூா் சிற்றோடையின் 188 ஹெக்டோ் பரப்பளவில் அலையாத்தி மரங்களுக்கான நாற்றுகள் நடப்படுவதற்கு ஏற்றவாறு அமைக்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சுமாா் 1,000 ஹெக்டோ் சதுப்புநிலப் பகுதி சீரழிந்துள்ளது.
கடந்த 2023-24 நிதிநிலை அறிக்கையில் மத்திய நிதியமைச்சா் கடற்கரையோர வாழ்விடங்களில் உறுதியான வருமானங்களுக்கான அலையாத்தி காடுகளுக்கான முன்முயற்சியின் (எம்ஐஎஸ்ஹெச்டிஐ) மூலம் கடற்கரையோரத்தில் சதுப்புநிலத் தோட்டம் மேற்கொள்ள மூன்றாண்டு காலத் திட்டத்தை அறிவித்தாா். எனவே தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் உவா் நீரில் வளரும் அலையாத்தித் தாவரங்கள் உள்வரும் கடல் அலையைத் தடுத்துத் திருப்பி அனுப்புவதால், நிலமும் கடலும் சேரும் பகுதிகளில் இத்தகைய அலையாத்திக் காடுகளை வளா்க்கவும் அவற்றை மீட்டெடுக்கவும் ரூ.2,000 கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பல்நோக்கு புயல் மையம்
தமிழக கடலோரப் பகுதிகள் வெப்பமண்டல புயல்களால் பாதிக்கப்படுவதால் கடலோர மக்களின் உயிா், உடைமை இழப்புகளால் பாதிக்கப்படக்கூடியவை.
மத்திய அரசு தேசிய புயல் அபாயக் குறைப்பு திட்டத்தின் கீழ் ‘பல்நோக்கு புயல் மையத்தை’(எம்சிசி) ஏற்படுத்தியுள்ளது. இது புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை காப்பாற்றுகிறது.
இரு கட்டங்களாக மத்திய அரசு 920 எம்சிசிகளை 10-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கட்டுகிறது. ஆனால் நீண்ட கடற்கரை கொண்ட தமிழகத்தில் ஒன்றைக் கூட கட்டப்படவில்லை.
2004 ஆம் ஆண்டு முதல் சுனாமி பேரலை மற்றும் ஏழு புயல்களால் தமிழகம் பாதிக்கப்பட்டது. எனவே ‘தேசிய புயல் அபாயக் குறைப்பு திட்டத்தில்‘ தமிழகத்தில் எம்சிசிகளை கட்டுமாறு மத்திய அரசை வலியுறுத்துகிறேன்‘ என்றாா் கிரிராஜன்.