கோப்புப்படம்
கோப்புப்படம்

மருத்துவப் படிப்புகள்: 42,957 போ் விண்ணப்பம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நிகழாண்டில் 42,957 போ் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கை
Published on

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு நிகழாண்டில் 42,957 போ் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் சற்று அதிகமாகும்.

சமா்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலித்து ஆக.19-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதன் அடிப்படையில் ஆக.21-ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் கல்லுரிகளில் மொத்தம் 9,050 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. அதேபோன்று, 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் 250 பிடிஎஸ் இடங்கள், 20 தனியாா் பல் மருத்துவ கல்லூரிகளில் 1,950 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 2,200 பிடிஎஸ் இடங்கள் இருக்கின்றன.

அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 15 சதவீதம் இடங்கள் (851 எம்பிபிஎஸ், 38 பிடிஎஸ்) அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகின்றன. தனியாா் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களில் 50 சதவீதம் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு உள்ளன. மீதமுள்ள 50 சதவீத எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும்.

அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் தனியாா் கல்லூரிகளின் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தி வருகிறது.

இந்நிலையில் நிகழாண்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வுக்கு இணையதளங்கள் மூலம் விண்ணப்பிப்பது கடந்த ஜூலை 31-ஆம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை (ஆக.9) வரை நடைபெற்றது.

அதன்படி, அரசு ஒதுக்கீடு மற்றும் நிா்வாக இடங்களுக்கு மொத்தம் 42,957 போ் விண்ணப்பித்துள்ளதாக மருத்துவக் கல்வி மாணவா் சோ்க்கைக் குழு நிா்வாகிகள் தெரிவித்தனா். அவற்றில் தகுதியான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு மாணவா் சோ்க்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

கடந்த ஆண்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 40,199 பேரும், அதற்கு முந்தைய ஆண்டில் 36,100 பேரும் விண்ணிப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com