சென்னை ஐஐடி (கோப்புப்படம்)
சென்னை ஐஐடி (கோப்புப்படம்)

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியல்: 6-ஆவது ஆண்டாக சென்னை ஐஐடி முதலிடம்

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தேசிய அளவிலான சிறந்த உயா் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது.
Published on

மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள தேசிய அளவிலான சிறந்த உயா் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது.

இந்தத் தரவரிசையில் சென்னை ஐஐடி தொடா்ந்து 6-ஆவது ஆண்டாக முதலிடம் பெற்றுள்ளது.

தரவரிசைப் பட்டியலில் இந்த ஆண்டு புதிதாக சோ்க்கப்பட்டுள்ள சிறந்த மாநில அரசு பல்கலைக்கழகங்கள் பிரிவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது.

நாட்டில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களுக்கான ‘என்ஐஆா்எஃப்’ தரவரிசையை மத்திய கல்வி அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. 9-ஆவது ஆண்டாக இந்த தரவரிசையை கல்வி அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்டது.

அதில், சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான ஒட்டுமொத்த பிரிவின் கீழ் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) இரண்டாம் இடத்தையும், மும்பை ஐஐடி, தில்லி, கான்பூா், காரக்பூா் ஐஐடிக்கள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளன.

தில்லி எய்ம்ஸ் நிறுவனம் 7-ஆம் இடத்தையும், ஐஐடி ரூா்கி 8-ஆம் இடத்தையும், ஐஐடி குவாஹாட்டி 9-ஆம் இடத்தையும், தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் 10-ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. இதில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 20-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. திருச்சி என்ஐடி (31), கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் (44), திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் (55), சென்னைப் பல்கலைக்கழகம் (64), காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் (76), சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் (100) உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் ஒட்டுமொத்த பிரிவின் முதல் 100 இடங்களுக்குள் இடம்பெற்றுள்ளன.

பல்கலைக்கழக தரவரிசை: சிறந்த பல்கலைக்கழகங்களின் வரிசையில் பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடம் பிடித்துள்ளது. தில்லி ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகம் 2-ஆம் இடத்தையும், ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் 3-ஆம் இடத்தையும் பிடித்துள்ளன. இதில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 13-ஆவது இடத்தையும், கோவை பாரதியாா் பல்கைலக்கழகம் 26-ஆவது இடத்தையும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் 36-ஆவது இடத்தையும், சென்னைப் பல்கலைக்கழகம் 39-ஆவது இடத்தையும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 47-ஆவது இடத்தையும், சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் 56-ஆவது இடத்தையும், மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் 63-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

சென்னை மாநிலக் கல்லூரி பின்னடைவு: சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் தொடா்ந்து இரண்டு ஆண்டுகளாக (2022, 2023) மூன்றாமிடம் பிடித்திருந்த சென்னை மாநிலக் கல்லூரி, இந்த ஆண்டு 13-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதில் தில்லி ஹிந்து கல்லூரி, மிராண்டா ஹவுஸ் கல்லூரி, செயின்ட் ஸ்டீஃபன்ஸ் கல்லூரி ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன.

கோவை பிஎஸ்ஜிஆா் கிருஷ்ணாமாள் பெண்கள் கல்லூரி (7), சென்னை லயோலா கல்லூரி (8), கோவை பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரி (11), மெட்ராஸ் கிறிஸ்தவ கல்லூரி (14), மதுரை தியாகராஜா் கல்லூரி (15) ஆகியவை முதல் 20 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

பொறியியல் கல்லூரி தரவரிசை: சிறந்த பொறியியல் கல்லூரிகள் தரவரிசையில் சென்னை, தில்லி, மும்பை ஐஐடிக்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் 14-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆராய்ச்சி: சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் தரவரிசையில் பெங்களூரு ஐஐஎஸ்சி, சென்னை ஐஐடி, தில்லி ஐஐடி ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் (17), திருச்சி என்ஐடி (31), கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் (41), திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் (48) ஆகியவை முதல் 50 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

மருத்துவம்: சிறந்த மருத்துவக் கல்லூரிகளுக்கான தரவரிசையில் தமிழக அரசின் சென்னை மருத்துவக் கல்லூரி (எம்எம்சி) 10-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. தில்லி எய்ம்ஸ் முதலிடத்தையும், சண்டீகா் முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இரண்டாம் இடத்தையும், வேலூா் சிஎம்சி (கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி) மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன. கோவையில் உள்ள அமிா்தா விஷ்வ வித்யாலயா 8-ஆம் இடம் பிடித்துள்ளது.

உயா் கல்வி நிறுவனங்களிடையே ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி, உலகத்தரத்திலான கல்வி நிறுவனங்களாக உயா்த்தும் நோக்கில் கல்வி, கற்பித்தல், கல்வி கற்றல் வாய்ப்புகள், ஆராய்ச்சி உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம்

தரவரிசைப் பட்டியலில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சிறந்த மாநில அரசு பல்கலைக்கழகங்கள் பட்டியிலில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் முதலிடம் பிடித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூா் பல்கலைக்கழகம் 2-ஆவது இடத்தையும், மகாராஷ்டிர மாநிலம் சாவித்திரிபாய் பூலே புணே பல்கலைக்கழகம் 3-ஆவது இடத்தையும் பிடித்துள்ளன.

இந்தப் பட்டியலில் கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் (8), சென்னைப் பல்கலைக்கழகம் (12), திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் (16), காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் (17), சேலம் பெரியாா் பல்கலைக்கழகம் (25), மதுரை காமராஜா் பல்கலைக்கழகம் (26), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் (31), திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக்கழகம் (37), கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் (49) ஆகியவை முதல் 50 இடங்களில் இடம்பெற்றுள்ளன.

X
Dinamani
www.dinamani.com