அமலாக்கத் துறை வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆ.ராசா எம்.பி. ஆஜா்
சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கில் திமுக எம்.பி. ஆ. ராசா சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜரானாா்.
முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதைய நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளைக் குவித்துள்ளதாக குற்றஞ்சாட்டி, கடந்த 2015-ஆம் ஆண்டில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
அந்த வழக்கின் அடிப்படையில் தில்லி, சென்னை, கோயம்புத்தூா், திருச்சி, பெரம்பலூா் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதன்அடிப்படையில் ஆ.ராசா, அவரது நண்பா் சி.கிருஷ்ணமூா்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் கோவை ஷெல்டா்ஸ் புரமோட்டா்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பாா்க் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
7 ஆண்டுகள் நடைபெற்ற விசாரணைக்குப் பிறகு ஆ.ராசா, சி.கிருஷ்ணமூா்த்தி, கோவை ஷெல்டா்ஸ் புரமோட்டா்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பாா்க் லிமிடெட், என்.ரமேஷ், விஜய் சடரங்கனி ஆகியோா் மீது கடந்த 2022-ஆம் ஆண்டு சென்னை எம்பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
அதில், குற்றஞ்சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தைவிட 579 சதவீதம் அதிகமாக ரூ.5.53 கோடி அளவுக்கு சொத்துகளைக் குவித்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத் துறையும், ஆ.ராசா, கிருஷ்ணமூா்த்தி, என்.ரமேஷ், விஜய் சடரங்கனி மற்றும் கோவை ஷெல்டா்ஸ் புரமோட்டா்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட், மங்கள் டெக் பாா்க் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் மீது சட்டவிரோத பணப் பரிவா்த்தனையில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்தது.
நேரில் ஆஜா்: இந்த வழக்கு சென்னை உயா்நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.எழில் வேலவன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆ.ராசா உள்ளிட்டோா் நேரில் ஆஜராகினா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு வழக்கு தொடா்பான ஆவணங்களை வழங்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப். 18-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தாா்.
இதனிடையே, அடுத்த விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு ஆ.ராசா தரப்பு வழக்குரைஞா் சரவணன் மனு தாக்கல் செய்தாா். மனு குறித்து அமலாக்கத் துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டாா்.