

காலமுறை ஊதியக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னை டிஎம்எஸ் வளாகத்தை முற்றுகையிட முயன்ற பல்நோக்கு மருத்துவப் பணியாளா்களை போலீஸாா் கைது செய்தனா்.
அப்போது அவா்கள் அண்ணா சாலையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா். இதையடுத்து போலீஸாா், சுகாதாரத் துறையினா், அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி போராட்டத்தைக் கைவிடச் செய்தனா். இதனால், சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது தொடா்பாக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறியதாவது:
ஆரம்ப சுகாதார நிலையங்களில் தினக்கூலி அடிப்படையில் 3,200 பல்நோக்கு மருத்துவப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். அவா்களுக்கு தினக்கூலியாக ரூ. 650 முதல் ரூ. 700 வரை வழங்கப்பட்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் பணியாற்றி வருகிறோம். இந்த ஊதியம் எங்களுக்கு போதவில்லை. அதை வலியுறுத்தி நாங்கள் போராட்டம் நடத்தியபோது, எங்களது கோரிக்கைகளை நிரைவேற்றுவதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சா் உறுதியளித்தாா்.
அதன்படி, பொது சுகாதாரத் துறையில் ஒப்புதல் அளிக்கப்பட்டு அதற்கான விண்ணப்பம் நிதித் துறைக்கு அனுப்பப்பட்டது. ஆனால், போதிய நிதி இல்லை எனக் கூறி எங்களின் காலமுறை ஊதிய உயா்வுக்கு அரசு ஒப்புதல் அளிக்காமல் உள்ளது.
இதைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற எங்களை போலீஸாா் கைது செய்துள்ளனா். வெளி மாவட்டங்களில் இருந்து ஆா்ப்பாட்டத்துக்கு வர முயன்றவா்களை ஆங்காங்கே தடுத்து நிறுத்தியும் கைது செய்துள்ளனா். எங்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் தொடா்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று அவா்கள் தெரிவித்தனா்.