மேக்கேதாட்டு விவகாரம்: கர்நாடக அரசின் விண்ணப்பத்தை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும் -டிடிவி தினகரன்

மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஒப்புதலை பெற கர்நாடக அரசு விண்ணப்பம்...
இடம் | மேக்கேதாட்டு
இடம் | மேக்கேதாட்டு படம் | தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
Published on
Updated on
2 min read

கா்நாடக மாநிலம், ராமநகரம் மாவட்டத்தில் மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு கா்நாடக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. இதுதொடா்பாக திட்ட சாத்தியக்கூறு வரைவு அறிக்கையை (டி.பி.ஆா்.) மத்திய நீா் ஆணையத்திற்கு கா்நாடக அரசு அளித்திருந்தது.

மேக்கேதாட்டு அணை கட்டுமான விவகாரத்தில், 2019ஆம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் ஒப்புதலை கா்நாடக அரசு தொடா்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால், இந்த விவகாரம் 6 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.

இதனிடையே, மேக்கேதாட்டு அணை திட்டத்திற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஒப்புதலை பெறவும், சுற்றுச்சூழல் பாதிப்பில்லாமல் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை வகுத்து அளிக்குமாறும், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் வானிலை மாற்றத் துறைக்கு, கா்நாடக அரசு சாா்பில் காவிரி நீா்ப்பாசனக் கழகம் கடிதம் அனுப்பியுள்ளது.

அதில், மேக்கேதாட்டு அணை கட்டுமான விவகாரத்தில், சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான விதிமுறைகளை வகுத்து ஒப்புதல் தர, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் வானிலை மாற்றத்துறைக்கு எவ்வித தடையும் இல்லை என்று கா்நாடக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக அவர் சனிக்கிழமை(ஆக. 24) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுமானத்திற்கான சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைத் திட்டம் தயாரிப்பதற்கான அனுமதி வழங்க வலியுறுத்தி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்டுமானத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி கர்நாடக அரசு விண்ணப்பத்திருக்கும் நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் முயற்சி இது. கர்நாடக அரசின் இந்த விண்ணப்பத்தை மத்திய அரசு ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும்.

தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமைகளையும், காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் அடியோடு பறிக்கும் வகையில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையை கட்டியே தீருவோம் என பிடிவாதப் போக்குடன் செயல்படும் கர்நாடக அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

கீழ் பாசன மாநிலங்களின் அனுமதியின்றி காவிரியின் குறுக்கே அணை கட்ட முடியாது என உச்சநீதிமன்றமும், காவிரி நடுவர் மன்றமும் தெளிவுபடுத்தியிருக்கும் நிலையில், சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு என்ற பெயரில் மத்திய அரசிடம் அனுமதி கோரியிருக்கும் கர்நாடக அரசின் செயல்பாடு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது.

ஒவ்வொரு பாசன ஆண்டிலும் ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் வரையிலான முக்கியமான காலகட்டத்தில் சாகுபடிக்கு தேவையான தண்ணீரை தர மறுக்கும் கர்நாடக அரசாலும், தமிழகத்திற்கான நீரை கேட்டுப் பெற முடியாத திமுக அரசாலும் தமிழகத்தின் விவசாய உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்தின் உயிர் நாடியாக திகழும் காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு அணையை கட்டி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கத் துடிக்கும் கர்நாடக அரசின் திட்டத்தை ஆரம்ப நிலையிலேயே நிராகரிக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com