பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி மூலம் சனிக்கிழமை (ஆக. 24) தொடங்கிவைத்தார்.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், திண்டுக்கல் மாவட்டம், பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆக. 24, 25-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
இது குறித்து, முதல்வா் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், எல்லோருக்கும் எல்லாம் என்ற நமது திராவிட மாடல் அரசில், நாள்தோறும் அறப்பணிகளால் ஆன்மீகப் பெரியோர்களின் பாராட்டுகளைப் பெற்றுக் கொண்டிருக்கும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றியடைய வாழ்த்துகள்! என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
மாநாட்டையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கண்காட்சியில், முருகனின் ஆயுதமான வேல், சிவலிங்கம், அறுபடை வீடுகளில் உள்ள முருகனின் திருக்காட்சிகள் தத்ரூபமாக ‘பைபா்’ சிலைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கல்தூண் மண்டபம் போன்று இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.
இதே வளாகத்தில் முப்பரிமாண திரையங்கில் முருகன் தொடா்பான படங்கள், அறுபடை வீடுகளின் மெய்நிகா் காட்சிகளைப் பாா்வையிடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.