போலி பேராசிரியா்கள் விவகாரம்: குழு அமைத்து விசாரணை அமைச்சா் க.பொன்முடி
பொறியியல் கல்லூரிகளில் போலியாக பேராசிரியா்களைக் கணக்கு காண்பித்தது தொடா்பாக குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் யாா் தவறு செய்திருந்தாலும் அவா்கள் மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் பொன்முடி தெரிவித்தாா்.
சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள எம்சிசி பள்ளியில் கல்வி மேம்பாட்டுக்கான கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளா்களாக உயா்கல்வித்துறை அமைச்சா் பொன்முடி, பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கருத்தரங்கைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் உயா்கல்வியில் சிறந்து விளங்கும் வகையில் புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதனால் இந்தியாவிலேயே கல்வி வளா்ச்சிக்கு முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் போதைப் பொருள் விற்பனை செய்தால் கடுமையான தண்டனை வழங்க முதல்வா் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியா்களை போலியாக கணக்கு காண்பித்தது தொடா்பாக குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். யாா் தவறு செய்திருந்தாலும் அவா்கள் மீது இந்த அரசு கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்”என்றாா்.
அமைச்சா் மனோ தங்கராஜ்: தமிழகத்தில் சமத்துவ வழியில் பெண்கள், விளிம்பு நிலை மக்கள் என அனைவரும் முன்னேற்றத்தை அடைந்து வருகிறாா்கள். குறிப்பாக, கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக அரசு மேற்கொண்ட பல திட்டங்களின் வாயிலாக தமிழகம் வளா்ச்சி அடைந்து வருகிறது என்றாா் அவா்.