முறைகேடு புகாா்: தீயணைப்புத் துறை துணை இயக்குநா் பணி நீக்கம் செல்லும்
சென்னை: முறைகேடு புகாா்களுக்கு ஆளான தமிழ்நாடு தீயணைப்புத் துறை துணை இயக்குநரை பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது செல்லும் என உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
தமிழ்நாடு தீயணைப்புத் துறையில் துணை இயக்குநராக பணியாற்றியவா் பரமசிவம். இவா், பணியில் இருந்தபோது பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளானாா். இவா், தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரி மீது நடந்த துறை ரீதியான விசாரணையின் அறிக்கை வந்த பின்னும், தகுந்த உத்தரவு பிறப்பிக்காமல் காலம் தாழ்த்தினாா், அரசு வீடு ஒதுக்கீடு செய்தும் அதில் தங்காமல் தனியாா் விடுதிகளில் தங்கினாா், அந்த விடுதிகளுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கினாா் என்ற புகாா்களின்பேரில் அவரை பணி நீக்கம் செய்யப்பட்டாா். இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில், பரமசிவம் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, பரமசிவத்துக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்தாா்.
இதை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில், தமிழ்நாடு உள்துறைச் செயலரும், தீயணைப்பு துறை கூடுதல் இயக்குநரும் மேல்முறையீடு செய்தனா். இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோா் கடந்த ஆக. 19 ஆம் தேதி விசாரித்தனா்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: இந்த வழக்கில் அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் கொள்கிறோம். இந்த குற்றச்சாட்டுக்காக பரமசிவத்துக்கு அதிகபட்ச தண்டனையாக பணி நீக்கம் செய்த உத்தரவை ஒழுங்கு நடவடிக்கை குழு பிறப்பித்துள்ளது.
2013 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவில் எந்த குறைபாட்டையும் காண முடியவில்லை. தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்கிறோம். தமிழ்நாடு அரசின் இந்த மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொள்கிறோம் என நீதிபதிகள் கூறியுள்ளனா்.