மைக் கிடைத்தால் போதும், அண்ணாமலைக்கு அப்படி ஒரு வியாதி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூற, நீங்கள் எப்படி பதவிக்கு வந்தீர்கள் என்று தெரியும் என அண்ணாமலை கடுமையான வார்த்தைகளால் பதிலடி கொடுக்க அதிமுக - பாஜக இடையே வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
அதிமுக - பாஜக இடையே ஏற்கனவே சுமூக உறவு இருந்தபோதே, ஒரு கட்சித் தலைவர் நேரடியாகவும், மற்றொரு கட்சித் தலைவர் அதற்கு மறைமுகமாகவும் பதிலடி கொடுத்து, பிறகு வார்த்தைகள் முற்றி இரு கட்சிகளுக்கும் இடையே பிளவு ஏற்பட்டு, தற்போது இரு கட்சிகளும் எதிர் எதிர் திசையில் நிற்கும்நிலையில், இந்த இரு கட்சித் தலைவர்களுக்கும் இடையேயான வார்த்தை மோதல் போராக வெடித்து வருகிறது.
இந்த நிலையில்தான், செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, மைக்கைப் பார்த்தால் அண்ணாமலைக்கு ஒரு வியாதி போல.. மைக்கைப் பார்த்துவிட்டாலே பேட்டி கொடுக்கத் தொடங்கிவிடுவார். அப்படி ஒரு வியாதி அவருக்கு. எல்லோரும் உழைத்து பதவிக்கு வந்தவர்கள். ஆனால் உழைக்காமலே பதவிக்கு வந்தவர் ஒருவர்தான். அவர் யாரென்றால்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைதான். அவர் கட்சிக்காக என்ன உழைப்பைக் கொடுத்தார். பாஜகவில் எத்தனை முன்னணி தலைவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு யாருக்குமே இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஏதோ ஒரு வழியில் தலைவர் பதவியைப் பெற்றார்.
அதை வைத்துக்கொண்டு இன்று தலைகால் புரியாமல் ஆடிக்கொண்டிருக்கிறார் அண்ணாமலை என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
இந்த பேச்சுக்கு பதிலடி கொடுப்பதாக எண்ணிய அண்ணாமலை, கடுமையான வார்த்தைகளால் தனது எதிர்க்கருத்தைப் பதிவு செய்து, அந்த பேச்சு இன்று கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், கூவத்தூரில் நடந்தது அதிமுக பொதுச் செயலாளரை தேர்வு செய்யும் நிகழ்வா? அங்கு நடந்தது ஒரு அலங்கோலம். புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி நடத்திய ஒரு கட்சி, திமுகவுக்கு மாற்றாக இருக்க வேண்டும் என்று மக்கள் நினைத்த கட்சி, கூவத்தூரில் என்ன அநியாயத்தை செய்தீர்கள். டெண்டர் போல தலைவரை தேர்வு செய்தீர்கள்.
எந்த எம்எல்ஏவுக்கு மாதம் மாதம் எவ்வளவு கொடுப்பது என்ற ஏலத்தில் தான் தலைவர் தேர்வு செய்யப்பட்டார் என்று அண்ணாமலையும் பதிலுக்கு பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். மேலும், பச்சை மையில் பத்து ஆண்டுகள் கையெழுத்துப் போட்ட, விவசாயியின் மகனை இந்த அண்ணாமலையைப் பற்றி பேச பழனிசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என்று கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி அண்ணாமலை விமரிசித்திருந்தார். இதற்கு, மீண்டும் அதிமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமியும், பாஜக தலைவர்களில் ஒருவரான, தமிழிசை சௌந்தரராஜன் தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று அண்ணாமலைக்கு அறிவுரை கூறும் வகையில் பேசியிருக்கிறார்.