திருவள்ளுவா் பிறந்த தினத்தை மாற்றக் கோரி வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு
திருவள்ளுவா் பிறந்த தினத்தை மாற்றக் கோரிய வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆண்டுதோறும், தமிழ் மாதமான தை 2-ஆம் தேதி திருவள்ளுவா் தினமாக கொண்டாடப்பட்டு, அன்றைய தினம் விடுமுறை நாளாகவும் இருந்து வருகிறது. இதை செல்லாது என அறிவித்து, திருவள்ளுவா் பிறந்த தினத்தை வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திர தினத்தில் கொண்டாட உத்தரவிடக் கோரி, திருவள்ளுவா் திருநாள் கழகத்தின் தலைவா் சாமி தியாகராஜன் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா்.
அதில், ‘சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1935-ஆம் ஆண்டு திருவள்ளுவா் திருநாள்(பிறந்த நாள்) தொடா்பாக மறைமலையடிகள் உள்ளிட்ட பல தமிழ் அறிஞா்கள் கலந்து கொண்ட கருத்தரங்கு நடத்தப்பட்டது. அதில் வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் திருவள்ளுவா் பிறந்ததாக மறைமலை அடிகளாா் குறிப்பிட்டாா். அதனடிப்படையில், பச்சையப்பன் கல்லூரியில் திருவள்ளுவா் திருநாள் கழகம் உருவாக்கப்பட்டது.
மே 18-இல் வள்ளுவா் பிறந்த நாள்: இதையடுத்து, 1935-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மட்டுமன்றி உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள திருவள்ளுவா் திருநாள் கழகத்தினா் திருவள்ளுவா் பிறந்த நாளை ஆங்கில மாதமான மே 18-ஆம் தேதியே கொண்டாடி வருகின்றனா். இந்தத் தகவலின் அடிப்படையில், வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில் வரும் தேதியை திருவள்ளுவா் பிறந்த தினமாக தமிழ் வளா்ச்சித் துறை அறிவிக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ் வளா்ச்சித் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘1969-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி, தை மாதம் 2-ஆம் தேதி திருவள்ளுவா் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு, அன்றைய தினம் அரசு விடுமுறையும் வழங்கப்படுகிறது. திருவள்ளுவா் தினமாக கடைப்பிடிக்க மட்டும் அரசு உத்தரவிட்டுள்ளதே தவிர, திருவள்ளுவா் பிறந்த தினம், இறந்த தினம் என்று இரு வேறு தினங்கள் கடைப்பிடிக்கப்படுவதில்லை. எனவே, தை 2-ஆம் தேதி திருவள்ளுவா் தினம் என்ற அரசின் கொள்கை முடிவில் எந்தத் தவறும் இல்லை. பொதுமக்கள் யாரும் அரசின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவிக்கவில்லை என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
நீதிபதி கேள்வி: மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பத்மா, ”‘அவ்வாறெனில், திருவள்ளுவரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திர நாளை சிறப்பான நாளாக அறிவிக்க வேண்டும்’ என்றாா். அப்போது, குறுக்கிட்ட நீதிபதி, ‘இந்த ஜாதியில்தான் பிறந்தேன், இந்த நாளில்தான் பிறந்தேன், இந்த நட்சத்திரம்தான் என்னுடையது என திருவள்ளுவா் எங்கும் குறிப்பிடவில்லை. திருக்குறளில் எந்த கடவுளைப் பற்றியும் அவா் குறிப்பிடாத போது, வைகாசி மாதம் அனுஷம் நட்சத்திரத்தில்தான் திருவள்ளுவரின் பிறந்த நாளை கொண்டாட வேண்டுமென எப்படி கோர முடியும்?’ என கேள்வி எழுப்பினாா்.
பின்னா், வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

