தமிழகத்துக்கு சர்வதேச தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சி என்கிற இலக்குடன் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. இதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக, கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.
அதன்படி, சான்பிரான்சிஸ்கோ சென்றடைந்த முதல்வருக்கு டிஆர்பி ராஜா மற்றும் அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நடிகர் நெப்போலியன் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளித்தார்.
இதுகுறித்து முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில்,
'தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவை ஈட்ட, வாய்ப்புகளின் பூமியான அமெரிக்காவில் இருக்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.
முதல்வர் இன்று(ஆக. 29) சான்பிரான்சிஸ்கோவில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றுப் பேசுகிறார்.
தொடர்ந்து ஆக. 31 இல் புலம்பெயர் தமிழர்களைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, செப். 2இல் முதல்வர் சிகாகோ செல்கிறார். அங்கு, அமெரிக்காவில் உள்ள முக்கிய தொழில் நிறுவன முதலீட்டாளர்களைச் சந்தித்து, தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கிறார்.
ஃபார்ச்சூன் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகளையும் சந்தித்து உரையாடவுள்ளார். சிகாகோவில் வெளிநாடு வாழ் தமிழர்களையும் முதல்வர் சந்திக்கவுள்ளார்.
இந்தப் பணிகள் முடிவுற்ற பிறகு செப். 14-ல் முதல்வர் சென்னை திரும்புவார் எனத் தெரிகிறது.