டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: திமுக அரசின் ஒப்புதலுடனேயே நடவடிக்கை! அண்ணாமலை குற்றச்சாட்டு

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திமுக ஆட்சியில் அனுமதி.! அண்ணாமலை குற்றச்சாட்டு
டங்ஸ்டன் சுரங்க விவகாரம்: திமுக அரசின் ஒப்புதலுடனேயே நடவடிக்கை! அண்ணாமலை குற்றச்சாட்டு
Published on
Updated on
2 min read

மதுரை மாவட்டம் மேலூா் அருகே அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்கக் கூடாது என பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புக்குரல் வலுத்து வருகிறது.

டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அ.வல்லாளபட்டியில்  திரண்ட கிராம மக்கள்.
டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அ.வல்லாளபட்டியில் திரண்ட கிராம மக்கள்.

மாநில அரசின் அனுமதியின்றி இதுபோன்ற சுரங்கம் தோண்டுவதற்கான ஏலங்களை மத்திய அரசு மேற்கொள்ளக்கூடாது என முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திமுக ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.

இதனை மேற்கோள்காட்டி அண்ணாமலை கூறியிருப்பதாவது, “ஊடகத்தில் கடந்தாண்டு வெளிவந்த செய்தியின்படி, ‘மதுரையில் டங்ஸ்டன் உலோகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான சுரங்கம் அமைக்க, தமிழக அரசு, மத்திய அரசின் அனுமதி கோரி இருப்பதாகவும், தமிழக கனிம வளத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்திருப்பதாகக்’ கூறப்பட்டிருந்தது.

மத்திய அரசின் சுரங்கத் துறை நேற்று(நவ. 30) வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 2024 பிப்ரவரி மாதம், மதுரையில் டங்ஸ்டன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதியில் சுரங்கம் அமைக்க ஒப்பந்தப் புள்ளி அறிவிப்பதற்கு முன்பாக, தமிழக அரசு கொடுத்த குறிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டன என்றும், ஒப்பந்தப் புள்ளி வெளியிட்ட பிப்ரவரி மாதம் முதல், ஒப்பந்தம் வழங்கப்பட்ட நவம்பர் 7, 2024 வரையிலான பத்து மாதங்கள், தமிழக அரசு இந்த ஒப்பந்தத்தைக் குறித்தோ, சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கவோ மத்திய அரசைத் தொடர்புகொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசைக் கோரியதும் திமுக அரசு தான். சுரங்க ஒப்பந்தம் வெளியிடக் குறிப்புகள் கொடுத்ததும் திமுக அரசு தான். கடந்த பத்து மாதங்களாக இது குறித்து வெளியில் தெரியாமல் மறைத்து வைத்திருந்த திமுக அரசு, தற்போது எதிர்ப்பு வருவதும், இது குறித்துத் தங்களுக்கு எதுவுமே தெரியாதது போல நாடகமாடுகிறது.”

“இதே மதுரை அரிட்டாப்பட்டி பகுதியில், தமிழக அரசின் டாமின் நிறுவனம், 2008 முதல் 30 ஆண்டுகளுக்கு, 47.37 ஹெக்டேர் நிலத்தில் கிரானைட் சுரங்கம் அமைக்கக் குத்தகை பெற்றுள்ளதையும், தற்போது டாமின் நிறுவனம் தனது குத்தகை உரிமத்தைத் திருப்பிக் கொடுத்துள்ளதையும், மதுரை அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரம் கிராமங்களில், மொத்தமுள்ள 20.16 சதுர கி.மீ. நில அளவில், 1.93 சதுர கி.மீ அளவே பல்லுயிர் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் திமுக அரசு, மத்திய அரசுக்குத் தெரிவித்துள்ளது.”

“டெல்டா பகுதியில் மீத்தேன் எடுக்கும் ஒப்பந்தத்தில் தெரியாமல் கையெழுத்து இட்டுவிட்டேன் என்று, சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அரங்கேற்றிய அதே நாடகத்தை, தற்போது மீண்டும் அரங்கேற்றத் துடிக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். திமுகவின் நாடகம், பொதுமக்களிடம் இனியும் எடுபடாது” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com