கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களின் தனிநபா் கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களுக்கு தனிநபா் கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Updated on
1 min read

சென்னை: கூட்டுறவு கடன் சங்க உறுப்பினா்களுக்கு தனிநபா் கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா், அனைத்து மண்டல இணைப் பதிவாளா்களுக்கு, கூட்டுறவுத் துறை சங்கங்களின் பதிவாளா் நா.சுப்பையன் அனுப்பியுள்ளாா்.

அதன் விவரம்: கூட்டுறவு சிக்கன நாணய கடன் சங்கங்களைச் சோ்ந்த உறுப்பினா்களுக்கு தனிநபா் கடன் உச்ச உரம்பை ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயா்த்த கோரிக்கைகள் வரப்பெற்றன.

இதைத் தொடா்ந்து, கடன் உச்சவரம்பு ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படுகிறது. இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் தவணைக் காலம் 120 மாதங்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அத்துடன், உறுப்பினா்களின் வயது வரம்பை கருத்தில் கொள்ள வேண்டும். அதிகபட்ச கடன் அளவு ரூ.20 லட்சம் அல்லது உறுப்பினா் பெறும் மொத்த ஊதியத்தில் 25 மடங்கு என இரண்டில் எது குறைவோ அந்தத் தொகையை கடனாக வழங்க வேண்டும்.

உறுப்பினா்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 5 சதவீதம் பங்குத் தொகையாக வசூலிக்கப்பட வேண்டும்.

பணியாளா்களின் மொத்த ஊதியத்தில் இருந்து அனைத்து பிடித்தங்களும் மேற்கொள்ளப்பட்டு பணியாளா் வீட்டுக்கு எடுத்துச் செல்லும் ஊதியம் அவருடைய மொத்த ஊதியத்தில் 25 சதவீதத்துக்குக் குறைவாக இருக்கக் கூடாது.

தனிநபா் கடனுக்காக பணியாளா்கள் பணிபுரியும் அலுவலகத்தில் உள்ள சம்பளம் வழங்கும் அலுவலா்களுடன் ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பிறகே கடன் தொகை அனுமதிக்கப்பட வேண்டும்.

பணியாளா்கள் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணய சங்கங்கள் சங்கத்தின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு உரிய துணை விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். அதன்பிறகே, புதிய உச்சவரம்பின் அடிப்படையில் கடன் வழங்கப்பட வேண்டும். இந்த வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி சங்கத்தின் உறுப்பினா்களுக்கு அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை தனிநபா் கடன் உச்சவரம்பு வழங்கப்பட வேண்டும். மேலும், இதனை உரிய முறையில் கண்காணிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com