
ஃபென்ஜால் புயலால் இரு நாள்களுக்கு மேல் மழைநீா் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 3 மாவட்டங்களின் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2,000 வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
ஃபென்ஜால் புயல் காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்கள் மிக அதிக பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. இதேபோன்று, திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மழையளவு வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.
முதல்கட்டமாக அதிகனமழை பெய்த விழுப்புரம், கடலூா், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இரண்டு நாள்களுக்கு மேலாக மழை வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக தலா ரூ.2,000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இந்த நிலையில், மூன்று மாவட்டங்களிலும் நிவாரணத் தொகை கொடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளது. அமைச்சர்கள் நிவாரணத் தொகை வழங்கும் பணியை ஆய்வு செய்து வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் முதல்கட்டமாக 159 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 மற்றும் நிவாரண பொருள்களை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
மேலும், அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் நிவாரணத் தொகைக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அடுத்த மூன்று நாள்களுக்குள் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று வருவாய்த்துறை முதன்மைச் செயலர் அமுதா தெரிவித்துள்ளார்.
மேலும், புயலால் பாதிக்கப்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களில் கடுமையான பாதிப்புக்கு உள்ளான பகுதிகளின் விவரங்களை அரசுக்கு அனுப்பி வைக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில், பிற மாவட்டங்களில் வெள்ளம் பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் நிவாரணத் தொகை வழங்குவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.