ஃபென்ஜால் புயல்: நியாய விலைக்கடைகள் மூலம் நிவாரணத் தொகை!

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்தொகை வழங்குவது பற்றி..
பெ. அமுதா
பெ. அமுதா
Published on
Updated on
1 min read

விழுப்புரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.2000 நிவாரணத்தொகை நியாய விலைக்கடைகள் மூலம் வழங்கப்படும். இதற்கான டோக்கன் வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது என்று மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர் பெ. அமுதா தெரிவித்தார்.

ஃபென்ஜால் புயலால் விழுப்புரம் மாவட்டம் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு வழங்குவதற்காக நிவாரணப் பொருள்கள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து அனுப்பப்பட்டு வருகின்றன. இந்த பொருள்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்திலுள்ள உள் விளையாட்டரங்கில் வைக்கப்பட்டு, பொருள்கள் பிரித்து அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்த பணியை வியாழக்கிழமை பார்வையிட்ட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலர், பின்னர். செய்தியாளர்களிடம் கூறியது:

ஃபென்ஜால் புயலால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பெரிய அளவில் பாதிப்பைச் சந்தித்து உள்ளன.. கடந்த இரு நாள்களுக்கு முன்பு தமிழக முதல்வர் விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்து, பாதிப்புகளைப் பார்வையிட்டுச் சென்று உள்ளார். புயலால் வாழ்வாதாரம் இழந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்த நிலையில், அதற்கான அரசாணை வருவாய்த் துறை சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை (டிச.5) முதல் நியாய விலைக் கடைகளில் டோக்கன் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த நியாய விலைக் கடைகளில் டோக்கன் வழங்கப்பட்டு 3 அல்லது 4 நாள்களில் நிவாரணத் தொகை வழங்கப்படும். கடந்த 3 நாள்களாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்கள் - பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்தடையும் நிவாரணப் பொருள்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில் 7 பகுதிகளைத் தவிர மற்ற பகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டுவிட்டது. அதுபோன்று குடிநீர் விநியோகமும் சீரான முறையில் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 3 நாள்களில் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உணவுப் பொட்டலங்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை சுமார் 3 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 105 சமுதாய சமையல் கூடங்கள் மூலம் உணவுத் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது..

பிற மாவட்டங்களிலிருந்து வரும் உணவுப் பொருள்கள், உள்ளிட்டவை மாவட்டத்தின் அந்தந்த எல்லைக்குள்பட்ட வட்டங்களைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு அங்கேயே வழங்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் புயல் சேதப் பாதிப்பு அதிகளவில் இருப்பதால், முழுமையான கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் நிறைவு பெறும். புயலால் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்த குடும்பங்கள் அனைத்துக்கும் ரூ.2000 நிவாரணத்தொகை வழங்கப்படும். ஒரு நாளைக்கு 100 பேர் வீதம் தொகை வழங்கப்படும் என்றார் அமுதா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com