அப்பாவுவுக்கு எதிரான அவதூறு வழக்கை முடித்துவைத்தது உச்சநீதிமன்றம்!
தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுவுக்கு எதிரான அவதூறு வழக்கை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை முடித்து வைத்தது.
சென்னையில் கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பேரவைத் தலைவர் அப்பாவு, தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நேரத்தில், அதிமுகவை சேர்ந்த 40 எம்எல்ஏ-க்கள் திமுகவில் இணையத் தயாராக இருந்ததாகவும், ஆனால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பெரிய மனதுடன் அதை ஏற்க மறுத்துவிட்டார் எனவும் பேசியிருந்தார்.
இந்தப் பேச்சு அதிமுக எம்எல்ஏக்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகத் தெரிவித்து, அப்பாவு-க்கு எதிராக அதிமுகவின் செய்தித் தொடர்பாளர் ஆர்.எம். பாபு முருகவேல் அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பாவு மனுதாக்கல் செய்ததை தொடர்ந்து, அவர் மீதான குற்ற அவதூறு வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் அதிமுகவின் பாபு முருகவேல் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த ஹிருஷிகேஷ் ராய் மற்றும் எஸ்விஎன் பாட்டி அமர்வு, அரசியல் அரங்கில் சிலர் கட்சி மாறவுள்ளதாக ஒருவர் கூறுவது எப்படி அவதூறாகும் என்று கேள்வி எழுப்பினர்.
இதுபோன்ற சூழலில், கட்சித் தாவல் தடைச் சட்டம் நாம் நாட்டில் பயன்படுத்த முடியும் என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, வழக்கை திரும்பப் பெறுவதாக மனுதாரர் கோரியதை தொடர்ந்து, திரும்பப் பெறுவதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்து வழக்கை முடித்து வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.