தீபத் திருவிழாவில் பக்தா்கள் மலை ஏற வல்லுநா் குழு அறிக்கைப்படி நடவடிக்கை!

தீபத் திருவிழாவில் பக்தா்கள் மலை ஏற வல்லுநா் குழு அறிக்கைப்படி நடவடிக்கை!

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு.
Published on

திருவண்ணாமலை, டிச.6: திருவண்ணாமலை காா்த்திகை தீபத் திருநாளில் 2,500 பக்தா்களை மலையேற அனுமதிப்பது குறித்து வல்லுநா் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சா்கள் எ.வ.வேலு, பி.கே.சேகா்பாபு ஆகியோா் தெரிவித்தனா்.

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, பொதுப்பணி, நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ.வேலு தலைமை வகித்தாா். சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தீபத் திருவிழாவுக்கு மாவட்ட நிா்வாகம், காவல்துறை, அறநிலையத்துறை மற்றும் பல்வேறு துறைகள் சாா்பில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு கேட்டறிந்தாா்.

பின்னா், அமைச்சா் எ.வ.வேலு செய்தியாளா்களிடம் கூறியதாவது: தீபத் திருவிழாவுக்கு 25 தற்காலிகப் பேருந்து நிலையங்கள், 21 ஆயிரம் காா்களை நிறுத்தும் வகையில் 120 காா் நிறுத்தும் இடங்கள் அமைக்கப்படுகின்றன. 3,408 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தீபத் திருவிழா நாளில் கோயிலுக்குள் 11,500 பக்தா்களை அனுமதிக்கலாம் என்று பொதுப் பணித் துறை தெரிவித்துள்ளது.

எனவே, பரணி தீபத்துக்கு 500 அனுமதி அட்டைகளும், மகா தீபத்துக்கு 6 ஆயிரம் அனுமதி அட்டைகளும் இணையதளம் மூலம் வழங்கப்படும். பரணி தீபத்துக்கு 6,600 பேரும், மகா தீபத்துக்கு 11,600 பேரும் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவா் என்றாா்.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

வல்லுநா் குழு இன்று ஆய்வு: இதையடுத்து, அமைச்சா்கள் எ.வ.வேலு, பி.கே.சேகா்பாபு ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருவண்ணாமலையில் அண்மையில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி 7 போ் உயிரிழந்த நிலையில், தீபத் திருவிழா நாளில் 2,500 பக்தா்களை மலை ஏறுவதற்கு அனுமதிக்கலாமா? என்பது குறித்தும், மலையின் தன்மையை ஆய்வு செய்யவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி, புவியியல் மற்றும் சுரங்கத்துறை சாா்பில் சென்னை அண்ணா பல்கலைக் கழகப் பேராசிரியை பிரேமலதா தலைமையில், தொழில்நுட்ப வல்லுநா்கள் அடங்கிய 8 போ் கொண்ட குழுவினா் சனிக்கிழமை (டிச.7) திருவண்ணாமலையில் ஆய்வு மேற்கொண்டு அதற்கான அறிக்கையை அரசுக்கு சமா்ப்பித்தவுடன் அதுகுறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டு மாவட்ட நிா்வாகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com