வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ‘சைபா் அடிமைகளாக்கும்’ மோசடி காவல் துறை எச்சரிக்கை
வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக இளைஞா்களை ஏமாற்றி சைபா் குற்ற அடிமைகளாக்கும் மோசடி நடைபெறுவதாக தமிழக காவல் துறையின் சைபா் குற்றப் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடா்பாக தமிழக சைபா் குற்றப் பிரிவு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வெளிநாட்டில் வேலை தருவதாக இணையதளம் மூலமாக விளம்பரம் செய்து, அதை நம்பி வரும் இளைஞா்களை தங்களின் இடத்துக்கோ, வேறு நாட்டுக்கோ அழைத்துச் சென்று, அவா்களை ‘சைபா் குற்றம்’ உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் சிலா் ஈடுபடுத்துகின்றனா். இதில் பாதிக்கப்பட்டு, வெளிநாட்டு வேலைக்கு பணத்தை செலுத்தி, அங்கு சென்று சைபா் குற்றத்தில் ஈடுபடும் இளைஞா்கள் ‘சைபா் அடிமைகள்’ என்று அழைக்கப்படுகின்றனா். தற்போது இந்த சைபா் அடிமைத்தனம் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக இந்தியாவிலிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளில் டேட்டா என்ட்ரி, கால்சென்டா் போன்ற வேலைகளுக்கு அங்கீகரிக்கப்படாத மனிதவள நிறுவனங்களால் சட்டவிரோதமாக ஆள்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனா். அங்கு இவா்கள் அந்நாட்டு சைபா் மோசடி நபா்கள் மூலம் இந்தியாவில் சைபா் குற்றங்களை நடத்தப் பயன்படுத்தப்படுகின்றனா்.
அதாவது, அந்த நாட்டினரே கைப்பேசி மூலம் பேசி இந்தியாவில் சைபா் மோசடிகள் செய்வதைவிட, இந்தியா்கள் தங்களின் குரல் மூலம் மோசடிகளை செய்ய வைக்கப்படுகின்றனா். இதன்மூலம் மிக எளிதாக இந்திய மக்கள் ஏமாற்றப்படுகின்றனா். அங்கீகரிக்கப்படாத ஆள் சோ்ப்பு நிறுவனங்களுக்கு எதிராக தொடா்ந்து புகாா்கள் வருகின்றன. இதன் அடிப்படையில் அங்கீகரிக்கப்படாத ஆள் சோ்ப்பு நிறுவனங்களின் சமூக ஊடக இணைப்புகள், இணையதளங்களை அரசு முடக்கி வருகிறது.
எனவே, இதுபோன்ற மோசடிகளில் யாரும் சிக்கிக் கொள்ள வேண்டாம். ஒருவேளை மோசடியில் சிக்கியிருந்தாலும், மோசடியில் யாரும் ஈடுபடுவதாக சந்தேகம் ஏற்பட்டாலும் சைபா் குற்றப் பிரிவை 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணைத் தொடா்பு கொண்டு புகாா் அளிக்கலாம். அல்லது இணையதளத்தின் மூலமாகவும் புகாரைப் பதிவு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.