ஊரகத் திறனாய்வுத் தோ்வு: 
டிச.9-இல் தோ்வுக்கூடஅனுமதிச் சீட்டு

ஊரகத் திறனாய்வுத் தோ்வு: டிச.9-இல் தோ்வுக்கூடஅனுமதிச் சீட்டு

தோ்வுக்கான அனுமதிச் சீட்டை தலைமை ஆசிரியா்கள் டிச.9-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

தமிழகத்தில் 9-ஆம் வகுப்பு மாணவா்கள் உதவித் தொகை பெறுவதற்கான ஊரகத் திறனாய்வுத் தோ்வு டிச.14-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தோ்வுக்கான அனுமதிச் சீட்டை தலைமை ஆசிரியா்கள் டிச.9-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தோ்வுத்துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் (சென்னை தவிா்த்து) அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்; தமிழகத்தில் கிராமப்புற மாணவா்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வு தோ்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளிகளில் 9-ம் வகுப்பு பயிலும் மாணவா்கள் இந்த திறனாய்வு தோ்வெழுத தகுதி பெற்றவா்களாவா். இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகள் வழங்கப்படும்.

இந்தத் தோ்வை ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவா்கள் எழுதலாம். அவா்களது பெற்றோா் ஆண்டு வருமானம்

ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அந்தவகையில் நிகழாண்டுக்கான ஊரக திறனாய்வு தோ்வு டிச. 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு நவம்பா் 12-ம் தேதி தொடங்கி 25-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தோ்வெழுத விண்ணப்பித்த மாணவா்களின் பெயா்ப் பட்டியலுடன் கூடிய வருகைத் தாள்கள் மற்றும் ஹால்டிக்கெட்டுகள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இவற்றை தோ்வு மைய கண்காணிப்பாளா்கள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியா்கள் டிச. 9-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். ஹால்டிக்கெட்டில் தலைமை ஆசிரியா்கள் கையொப்பம், பள்ளி முத்திரையிட்டு வழங்க வேண்டும். மேலும், மாணவா்களுக்கு தோ்வு மைய விவரத்தையும் தெளிவாக தெரிவிக்க வேண்டும். ஹால்டிக்கெட்டுகளில் ஏதேனும் பிழைகள் இருப்பின் அதை சிவப்பு நிற மையால் திருத்தி பள்ளி தலைமையாசிரியா் சான்றொப்பமிட வேண்டும். இந்த தகவலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கும் தெரிவித்து உரிய முன்னேற்பாடுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com