சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்Express

சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள், பயணிகளிடையே மோதல்

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கும், இலங்கைப் பயணிகளுக்குமிடையே நடந்த மோதல்
Published on

சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகளுக்கும், இலங்கைப் பயணிகளுக்குமிடையே நடந்த மோதல் சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை விமான நிலையத்துக்கு இலங்கை, துபை உள்ளிட்ட நாடுகளிலிருந்து வருகின்ற விமானங்களில் அதிகளவில், தங்கம் கடத்தி வரப்படுவதால், குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகளை சுங்க அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து, சந்தேகிக்கும் பயணிகளை நிறுத்தி விசாரணையும் நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், இலங்கையிலிருந்து ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானத்தில் 4 பயணிகள் சுற்றுலாப்பயணிகளாக ஞாயிற்றுக்கிழமை (டிச.8) காலை சென்னை வந்தனா். அவா்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை துணை ஆணையா் சரவணன் தலைமையிலான சுங்க அதிகாரிகள், தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா். அப்போது, இலங்கைப் பயணிகள் தங்களை துணி வியாபாரிகள் என கூறியதுடன், சந்தேகத்தின் பேரில் தங்களை சோதனையிடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றி இருதரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவா்கள் 4 பேரையும் பிடித்து வைத்த சுங்கத்துறை அதிகாரிகள், இது குறித்து விமானநிலைய காவல்நிலையத்தில் புகாரளித்தனா். தங்களைப் பணி செய்ய விடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி 4 போ் மீதும் சுங்கத்துறை துணை ஆணையா் சரவணன் அளித்த புகாரைத் தொடா்ந்து இலங்கைப் பயணிகள் 4 பேரிடமும் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com