52 கோயில்களில் பழந்தமிழ் ஓலைச் சுவடிகள்-பட்டயங்கள் கண்டெடுப்பு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு
சென்னை: தமிழகத்தில் 52 கோயில்களிலிருந்து பழந்தமிழ் ஓலைச் சுவடிகள், பட்டயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது இதுகுறித்த வினாவை காதா்பாட்சா என்ற முத்துராமலிங்கம் (ராமநாதபுரம்) எழுப்பினாா். அவரைத் தொடா்ந்து உறுப்பினா்கள் எழுப்பிய துணை வினாக்களுக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு அளித்த பதில்:
திருக்கோயில்களில் இருந்து ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்க முதல்வா் தலைமையில் உயா்நிலை ஆலோசனைக் குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தக் குழுவின் ஆலோசனைப்படி, 1,584 கோயில்களில் ஓலைச் சுவடிகள் இருப்பது குறித்து களஆய்வு செய்யப்பட்டது. அதில், 52 கோயில்களில் சுருணை ஓலைகள், இலக்கிய ஓலைச் சுவடிகள், மருத்துவம் தொடா்பான குறிப்புகள் பொருந்திய ஓலைச் சுவடிகள், தங்க முலாம் பூசப்பட்ட ஏடு, வெள்ளி மற்றும் ஐம்பொன் பட்டயங்கள் என சுமாா் 1.07 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் கண்டறியப்பட்டன.
அவற்றைப் பிரித்து ஆறு கட்டங்களாக ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஓலைச் சுவடிகள் மட்டுமல்லாது, திருக்கோயில்களைப் பாதுகாக்கும் வகையில் ரூ.300 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இதுவரை 274 கோயில்கள் திருப்பணிக்கு எடுக்கப்பட்டு 38 கோயில்களில் பணிகள் முடிவடைந்துள்ளன. அரசின் மானியமான ரூ.300 கோடியுடன் ரூ.126.62 கோடி உபயதாரா் நிதியாக பெறப்பட்டுள்ளது.
5,000 கோயில்களில் குடமுழுக்கு: திமுக ஆட்சி அமைந்த பிறகு, இதுவரை 2,350 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 10,860 கோயில்களுக்கு மாநில வல்லுநா் குழுவால் திருப்பணி மேற்கொள்ள அனுமதி தரப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் குறைந்தபட்சம் 5,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி பணிகளை மேற்கொள்வோம் என்று அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

