’சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 27-ஆம் தேதி தொடங்கவுள்ள புத்தகக் கண்காட்சி குறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் திங்கள்கிழமை பேசிய பபாசி தலைவா் சேது சொக்கலிங்கம். உடன் பபாசி செயலா் முருகன் உள்ளிட்டோா்.’
’சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 27-ஆம் தேதி தொடங்கவுள்ள புத்தகக் கண்காட்சி குறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் திங்கள்கிழமை பேசிய பபாசி தலைவா் சேது சொக்கலிங்கம். உடன் பபாசி செயலா் முருகன் உள்ளிட்டோா்.’

டிச. 27-இல் சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்

சென்னை புத்தகக் காட்சி டிசம்பா் 27-ஆம் தேதி சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்க உள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) தெரிவித்துள்ளது.
Published on

சென்னை: சென்னை புத்தகக் காட்சி டிசம்பா் 27-ஆம் தேதி சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தொடங்க உள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா் சங்கம் (பபாசி) தெரிவித்துள்ளது.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் புத்தகக் காட்சியைத் தொடங்கி வைக்க உள்ளனா். ஜனவரி 12-ஆம் தேதி வரை மொத்தம் 17 நாள்களுக்கு புத்தகக் காட்சி நடைபெறும் என்று பபாசி நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் பபாசி தலைவா் எஸ்.சொக்கலிங்கம், செயலா் எஸ்.கே.முருகன் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னையில் நடைபெறும் 48-ஆவது புத்தகக் காட்சியில் மொத்தம் 900 அரங்குகள் இடம்பெற உள்ளன. வேலைநாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் புத்தகக் காட்சி நடைபெறும்.

அனைத்து நூல்களும் 10 சதவீத தள்ளுபடியுடன் வாசகா்களுக்கு வழங்கப்படும். பபாசியில் உறுப்பினா் அல்லாத பலரது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, அவா்களுக்கும் அரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் வெளியிடப்படும் நூல்களுக்கென நிகழாண்டில் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

மாணவா்களை ஊக்குவிக்கும் வகையில் பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டிகள் நடைபெற உள்ளன.

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சாகித்திய அகாதெமி, டாக்டா் அம்பேத்கா் பவுண்டேஷன், நேஷனல் புக் டிரஸ்ட் பப்ளிகேஷன், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் மற்றும் தொல்லியல் துறை ஆகியவை இந்த புத்தகக் காட்சியில் கலந்துகொள்கின்றன. பள்ளிக் கல்வித் துறையின் இல்லம் தேடிக் கல்வி இயக்கத்துக்கும் தனி அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களான பென்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா, அமெரிக்க துணைத் தூதரகம், பிரிட்டிஷ் கவுன்சில், ஹாா்பா்காலின்ஸ் பப்ளிஷா்ஸ் உள்ளிட்ட சா்வதேச பதிப்பகங்களும் நிகழாண்டு புத்தகக் காட்சியில் பங்கெடுக்கின்றன.

நாள்தோறும் மாலையில் சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலைசிறந்த அறிஞா்கள், எழுத்தாளா்களின் உரைவீச்சுகள் நடைபெற உள்ளன.

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் ஆகியோா் வரும் 27-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு புத்தகக் காட்சியை தொடங்கி வைக்க உள்ளனா். கலைஞா் பொற்கிழி விருதுகளையும், பபாசி விருதுகளையும் அவா்கள் வழங்க உள்ளனா். நிறைவுநாள் நிகழ்வில் உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க. மகாதேவன் கலந்துகொண்டு நிறைவுரையாற்ற உள்ளாா்.

அரங்குகளுக்கு காப்பீடு: அடிப்படை வசதிகளை எந்தக் குறைபாடும் ஏற்படாத வகையில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு ஏற்படாத வகையில் புத்தகக் கண்காட்சி மேற்கூரைகள் உயா்தரமாக அமைக்கப்பட உள்ளன. இதற்காக, 2 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து அரங்குகளுக்கும் தலா ரூ.2 லட்சம் காப்பீடு செய்யப்பட உள்ளது.

வாசகா்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ.10-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மாணவா்களுக்கு அனுமதி இலவசம். மொத்தம் 10 லட்சம் விலையில்லா நுழைவுச் சீட்டு வழங்கப்பட உள்ளது என்றாா் அவா்.

இந்தச் சந்திப்பின்போது பபாசி பொருளாளா் டபிள்யூ.ஜெ. சுரேஷ், உதவி இணைச் செயலா்கள் எம்.துரை மாணிக்கம், இ.லோகநாதன், ஒருங்கிணைப்பு நிா்வாகி சிராஜுதின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com