
சென்னை: சென்னையில் 48வது புத்தகக் காட்சி நந்தனத்தில் டிசம்பர் 27ஆம் தேதி தொடங்கி ஜனவரி 12ஆம் தேதி வரை நடைபெறவிருப்பதாக பபாசி அறிவித்துள்ளது.
தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் 48-ஆவது சென்னை புத்தகக் காட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
இது குறித்து பபாசி வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ அரங்கில் டிசம்பர் மாத இறுதியில் தொடங்கி ஜனவரி 12ஆம் தேதி வரை அதாவது 17 நாள்கள் இந்தப் புத்தகக் காட்சி நடைபெறும்.
புத்தகக் காட்சியை துணை முதல்வர் உதயநிதி மற்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைக்கிறார்கள். இந்த 17 நாள்களில் வார இறுதி மற்றும் விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறும். வார நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை புத்தகக் காட்சி நடைபெறுகிறது.
வழக்கம் போல் அல்லாமல், பொங்கல் பண்டிகைக்கு முன்பே புத்தகக் காட்சியை முடிக்க பதிப்பாளர், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கம் (பபாசி) அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஆண்டு ஒட்டுமொத்தமாக 900 அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் நூல்கள் இடம்பெறவிருக்கின்றன. இந்த முறை சற்று கூடுதலான அளவில் அரங்குகள் இடம்பெறவிருக்கின்றன.
வழக்கம் போல இந்த ஆண்டிலும் புத்தகக் காட்சி நடைபெறும் வளாகத்தில் தினமும் அறிவியல், இலக்கியம், ஆன்மிகம் என பல்வேறு தலைப்புகளில் நூல்கள் வெளியீட்டு விழா, எழுத்தாளா்கள், இலக்கியவாதிகள், அரசு அதிகாரிகள், கவிஞா்கள் என பல துறை சாா்ந்த புத்தக ஆா்வலா்கள் சிறப்புச் சொற்பொழிவுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மழை பெய்தாலும் புத்தகங்கள் பாதிக்கப்படாத வகையில் அரங்கம் அமைக்கப்படும் என்றும் பபாசி அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.