
சென்னை: அரிட்டப்பாட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு ஒப்பந்தப்புள்ளி கோரிய போதே, தமிழக அமைச்சரான நான் கடிதம் எழுதினேன். உடனடியாக விவரமாகக் கடிதம் எழுதை எதிர்ப்பை பதிவு செய்தேன் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை கூடியது. அப்போது, தமிழகத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் இன்று தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டப்பேரவையில் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார்.
தொடர்ந்து அவை உறுப்பினர்கள் தீர்மானத்தின் மீது பேசினார்கள். அப்போது, டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தனித் தீர்மானம் மீது எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
தமிழக அரசு 10 மாதங்களாக என்ன செய்துகொண்டிருந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார்.
சுரங்கத்துக்கு ஒப்பந்தம் விடுவதற்கான சட்டத்தில் மத்திய அரசு தானே ஒரு திருத்தத்தை செய்துவிட்டது. யாரையும் கேட்கவில்லை. சட்டத்தைத் திருத்திவிட்டு மத்திய அரசு என்ன சொல்கிறது என்றால், சுரங்கத்துக்கான ஏலம் விடும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. மேலும், மத்திய அரசு தேர்வு செய்யும் ஏலதாரருக்கு சுரங்கத்தை குத்தகை விடும் அதிகாரம் மட்டுமே மாநிலத்துக்கு உள்ளது என்று கூறியிருக்கிறது.
எனவே,இந்த சட்டத்தின் மூலம் மாநில அரசின் சுயமரியாதைக்கு மத்திய அரசு சவால் விட்டுள்ளது. நாங்கள் தேர்ந்தெடுத்துவிட்டோம், அவர்களுக்கு சுரங்கத்தைக் கொடுங்கள் என்றால், மத்திய அரசு என்ன எஜமானர்களா? தமிழக அரசு என்ன கைகட்டி நிற்கும் வேலைக்காரனா? என காரசாரமாக பேரவையில் துரைமுருகன் பேசினார். தொடர்ந்து, சுரங்கம் அமைக்கப்படும் இடத்தின் விவரங்களை புள்ளிவிவரத்தோடு விளக்கம் கொடுத்து பதில் அளித்தோம். ஆனால், அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, சுரங்கத்துக்கு மத்திய அரசு ஏலம் விட்டது.
மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கேட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து தமிழக அரசு கடிதம் எழுதியது, சுரங்கம் தொடர்பான விவகாரங்களை மாநில அரசின் உரிமைக்கே விட்டுவிடும்படி வலியுறுத்தியிருந்தோம். ஆனால், அதனை மத்திய அரசு ஏற்கவில்லை என்றும் ஆனால், எடப்பாடி பழனிசாமியோ கடிதம் எழுதியதாகத் தெரியவருகிறது என்று பேசியிருக்கிறீர்கள் என்றும் துரைமுருகன் கூறினார்.
இதற்கிடையே பேசிய எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு எழுதிய கடிதம் பற்றி வெளியிட்டால்தானே எங்களுக்குத் தெரியும். எங்களுக்குத் தெரிந்தால்தானே தெரியும் என சொல்ல முடியும். அதனால்தான் தெரியவருகிறது என்று நான் கூறியிருந்தேன். இப்போதுதான் கடிதம் எழுதியிருந்ததாகவும் அதன் விவரங்களையும் வெளியிடுகிறீர்கள் என்று பழனிசாமி கூறினார்.
அதற்கு பதிலளித்த துரைமுருகன், இனி, கடிதத்தின் நகலை உங்களுக்கும் அனுப்புகிறோம் என்று கூறியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
ஆமாம் போட வேண்டுமா?
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, இது மக்கள் பிரச்னை, இது பற்றி நாங்கள் கேள்வி எழுப்பக் கூடாதா? இது மிக முக்கியமான மக்கள் பிரச்னை? வாழ்வாதாரப் பிரச்னை. நீங்கள் தீர்மானம் நிறைவேற்றினால் அதற்கு நாங்கள் ஆமாம் போட்டுவிட்டுப் போக வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த துரைமுருகன், நீங்கள் ஆட்சியில் இருந்த போது, மத்திய அரசுக்கு எழுதிய கடிதங்களை எல்லாம் எங்களுக்கும் அனுப்பி, இதுபோல கடிதம் எழுதியிருக்கோம் என்று சொன்னீர்களா என கேள்வி எழுப்பினார். தொடர்ந்து தமிழக முதல்வரும் பதிலளித்துப் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.