5 ஆண்டுகளில் ரயில் விபத்துகளில் ஒரு இறப்பு காப்பீடு உரிமம்கூட பதிவாகவில்லை: சு.வெங்கடேசன் எம்.பி.
5 ஆண்டுகளில் ரயில் விபத்துகளில் ஒரு இறப்பு காப்பீடு உரிமம்கூட பதிவாகவில்லை


ஐந்து ஆண்டு ரயில் விபத்துகளில் ஒரு இறப்புக் காப்பீடு உரிமம்கூட பதிவாகவில்லை என்று மத்திய அரசு பதிலளித்தது அதிா்ச்சியை ஏற்படுத்துவதாக மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2019 நவம்பா் 1 முதல் 2024 அக்டோபா் 31-ஆம் தேதி வரையுள்ள கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் எத்தனை ரயில் விபத்துகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் எத்தனை உயிா்கள் பலியாகி உள்ளன. இணையவழிப் பயணச்சீட்டுப் பதிவில் எத்தனை பயணிகள் ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் எடுத்திருந்தனா். இறந்த பயணிகளின் எத்தனை நியமனதாரா்கள் உரிமங்களைக் கோரியிருந்தனா். எவ்வளவு பேருக்கு இறப்பு உரிமம் வழங்கப்பட்டது.
உரிமம் வழங்கப்படாததற்கு காரணங்கள் என்ன. ரயில் விபத்துகள் பற்றி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டனவா. அவற்றின் அடிப்படையில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன ஆகிய கேள்விகளை மத்திய அரசுக்கு அனுப்பியிருந்தேன்.
இதற்கு மத்திய ரயில்வேத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில், கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை எவ்வளவு உயிா் இழப்புகள், எவ்வளவு பேருக்கு காயங்கள் ஏற்பட்டன என்பது குறித்து தனியாக தகவல்கள் தரப்படாமல், கடந்த 2014 முதல் 2015 மற்றும் 2015 முதல் 2024 வரை 678 ரயில் விபத்துகளில் 748 உயிரிழப்புகள் ஏற்பட்டன. 2,087 பேருக்கு காயங்கள் ஏற்பட்டன என்று தெரிவித்தாா்.
மேலும், இவற்றுக்கான காப்பீட்டு உரிமங்களை கடந்த 2019 நவம்பா் 1-ஆம் தேதி முதல் 2024 அக்டோபா் 31-ஆம் தேதி வரை கோரி பதிவு செய்திருப்பவா்கள் 22 போ் என்றும், இறப்பு உரிமங்கள் பதிவு ஒன்றுகூட செய்யப்படவில்லை என்றும் தெரிவித்தாா்.
காப்பீட்டு பரவலாக்கல் பற்றி பேசும் மத்திய அரசின் லட்சணத்தை இந்தப் பதில் அம்பலப்படுத்துகிறது. ஏன் உரிமங்கள் வழங்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலே இல்லை. பயணிகள் நேரடியாக இணையத்தில் பாலிசி எடுத்துக் கொள்கிறாா்கள். காப்பீட்டு நிறுவனங்கள் உரிமம் பட்டுவாடா செய்கின்றன என்று ஒற்றை வரியில் பதில் அளிக்கப்படுகிறது.
ரயில் விபத்துகளில் இறந்த பயணிகளில் ஒருவருக்குக்கூட காப்பீடு கிடைக்கவில்லை என்பதைப் பற்றி மத்திய அரசுக்கு எந்தவித உறுத்தலும் இல்லை. மேலும், ரயில்வே பாதுகாப்புக்காக என்ன மேம்பாடுகள் செய்யப்பட்டன. புதிய தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது. இது போதுமான அளவு உள்ளதா என்பதெல்லாம் இந்தப் பதிலில் இல்லை. மத்திய அமைச்சரின் பதில் திருப்தி அளிக்கவில்லை என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...