ஒரே நாடு, ஒரே தேர்தல் ஜனநாயகத்தை கொன்றுவிடும்: முதல்வர் ஸ்டாலின்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்த்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து..
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்
Published on
Updated on
1 min read

ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டம் ஜனநாயகத்தை கொன்றுவிடும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.

மக்களவை, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தோ்தல் நடத்தும் நடைமுறையை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென 2 மசோதாக்களை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய முடிவு செய்து, அதற்கு கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த இரு மசோதாக்களும் குளிர்கால கூட்டத்தொடரிலேயே இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது:

“கூட்டாட்சிக்கு எதிரான, நடைமுறைக்கு மாறான ஒரே நாடு ஒரே தேர்தலை இந்தியா கூட்டணி எதிர்க்கும். ஏனெனில், அது நாட்டின் ஒற்றை ஆட்சி வடிவத்தை அபாயத்தில் தள்ளும். பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தின் செயல்பாட்டை கொன்றுவிடும்.

குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தும் வகையில் உள்நோக்கத்துடன் பாஜக அரசு செயல்படுகிறது. இது நமது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

முன்மொழியப்பட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்பட்டால், நாடு அராஜகம் மற்றும் சர்வாதிகாரத்தில் நழுவுவதைத் தடுக்க, நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களால் தேர்தல் வடிவில் உள்ள சமநிலைகள் நீக்கப்படும். மேலும், மாநிலத் தேர்தல்கள் அவற்றின் முக்கியத்துவத்தை இழந்து பிராந்திய உணர்வுகள் மற்றும் பன்முகத்தன்மை அழியும்.

இந்தியாவின் அரசியலை என்றென்றும் மாற்றியமைக்க அச்சுறுத்தும் முக்கியமான சட்டத்தை நிறைவேற்ற பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை. இருப்பினும், நாட்டின் முன்னேற்றத்தை பாதிக்கும் முக்கியப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பாஜகவின் தோல்வியிலிருந்து கவனத்தைத் திருப்ப, துணிச்சலான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

இந்தியாவையும், அதன் பன்முகத்தன்மையையும், அரசியலமைப்பையும் காப்பாற்ற, அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு, தேர்தல் சீர்திருத்தம் என்ற போர்வையில் திணிக்கப்பட்ட இந்த சட்டத்துக்கு எதிராகப் போராட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com