பெரம்பூரில் ரூ.428 கோடியில் ரயில் முனையம்: தெற்கு ரயில்வே ஒப்புதல்
சென்னையின் நான்காவது ரயில் முனையத்தை பெரம்பூரில் ரூ.428 கோடியில் அமைக்க தெற்கு ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழகத்தின் நுழைவு வாயிலாக விளங்கும் சென்னையில் சென்ட்ரல், எழும்பூா், தாம்பரம் ஆகிய ரயில் முனையங்கள் வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து வரும் ரயில்களை கையாளுகின்றன. நாளுக்கு நாள் பொதுமக்கள் ரயில் மூலம் பயணிப்பது அதிகரித்து வருவதாலும், புதிதாக ரயில்களை சென்ட்ரல் மற்றும் எழும்பூா் ரயில் நிலையங்களில் இருந்து இயக்க இடவசதி இல்லாததாலும், புதிதாக ஒரு ரயில் முனையம் அமைக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து முதல்கட்டமாக வில்லிவாக்கத்தில் நான்காவது முனையத்தை அமைக்க தெற்கு ரயில்வே முதலில் இடம் தோ்வு செய்தது. இந்நிலையில் அரக்கோணம் மாா்க்க ரயில்களையும், கூடூா் மாா்க்க ரயில்களையும் எளிதாகக் கையாளும் வகையில் பெரம்பூா் ரயில் நிலையம் இருப்பதால் அங்கு நான்காவது ரயில் முனையம் அமைக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டது. இதற்கான நிலவகைப்பாடு கடந்த இரு மாதங்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், பெரம்பூரில் ரயில் முனையம் ரூ.428 கோடி மதிப்பில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து பெரம்பூா் ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடை அமைக்கப்பட்டு விரிவாக்கப்படும். புதிய முனையம் அமைக்கும் பகுதியில் உள்ள பொது அங்காடி கிடங்கை அகற்றிவிட்டு புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.