
சேலம்: கோவில் விவகாரத்தில் உங்கள் வீட்டில் ஆம்பளைங்களே இல்லையா? என பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருள் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டியில் அங்காளம்மன் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த தங்களுக்கே சொந்தம் என
இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து கடந்த வாரம் பூட்டி சீல் வைத்தனர்.
இந்த நிலையில், கோவிலை திறக்க உதவிடுமாறு இரு தரப்பு அழைப்பின் பேரில் சேலம் மேற்கு தொகுதி பாமக சட்டப்பேரவை உறுப்பினர் அருள் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து ஒரு தரப்பினர் ஆண்களும் மற்றொரு தரப்பில் பெண்கள் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்று பேசினர்.
அப்போது, கோவில் அரசு நிலத்தில் இருப்பதால், அனைவருக்குமான கோவிலாக மாற்றும் நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும் சூழல் உள்ளது. அதனால், இரு தரப்பினரும் ஒற்றுமையாக கோவிலை திறந்து விழா நடத்துங்கள் என்று கூறியதை ஒரு தரப்பு ஏற்றாலும், மற்றொரு தரப்பினரான பெண்கள் எதையும் கேட்காமல் பேசியதால் ஆவேசமடைந்த அருள், பெண்களைப் பார்த்து உங்கள் வீட்டில் ஆம்பளைங்க இல்லையா, எல்லாம் பொட்டையா என பேசினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைக் கேட்ட பெண்கள் எம்எல்ஏவிடம் கையெடுத்து கும்பிட்டு இப்படியெல்லாம் பேச வேண்டாம் என கதறி அழுதனர். இதனால், பெண்கள் மத்தியில் ஒருவிதமான சலசலப்பு ஏற்பட்டதை அடுத்து சமாளித்துக் கொண்டு பேசிய அருள், தற்போது கோவிலை திறக்க இரு தரப்பும் முக்கியஸ்தர்கள் பேசினால் மட்டுமே தீர்வு காண முடியும். இல்லாவிட்டால் கோவில் அனைவருக்குமான பொது கோவிலாகிவிடும், நீங்களே முடிவு செய்து சொல்லுங்கள் என்றார். ஆனால் இதற்கு பெண்கள் எதுவும் கூறாமல் கோவில் பகுதிக்கு சென்றனர். எந்தவித முடிவும் எட்டாமலே பேச்சுவார்த்தை முடிந்தது.
இந்த நிலையில், பாமக சட்டப்பேரவை உறுப்பினர் பெண்களிடம் அவதூறாக பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.