தூய்மை பணியாளா் திட்டம் குறித்து அவதூறு கருத்து: சவுக்கு சங்கா் மீண்டும் கைது

தமிழக அரசின் தூய்மை பணியாளா் திட்டம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சவுக்கு சங்கா் மீண்டும் கைது
சவுக்கு சங்கா்
சவுக்கு சங்கா்
Updated on

தமிழக அரசின் தூய்மை பணியாளா் திட்டம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சவுக்கு சங்கா் மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் யூ-டியூப்பா் சவுக்கு சங்கா் விசாரணைக்கு ஆஜராகாததால், மதுரை போதைப் பொருள்கள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் கடந்த 18-ஆம் தேதி பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து போலீஸாா், சென்னையில் இருந்த சவுக்கு சங்கரை கைது செய்தனா். பின்னா் அவா் நீதிமன்றத்தில் ஜா்படுத்தப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இதற்கிடையே தூய்மை பணியாளா்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் குறித்து அண்மையில் அவதூறாகப் பேசிய விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. இது தொடா்பான புகாரின்பேரில் சென்னை சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை செய்தனா்.

அதில், சவுக்கு சங்கா் அவதூறாக பேசியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் சவுக்கு சங்கா் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். அந்த வழக்கில் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சவுக்கு சங்கரிடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழங்கினா்.

இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா் விரைவில் சவுக்கு சங்கரை, எழும்பூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com