ஜாபா் சாதிக் வழக்கில் நீதிபதி விலகல்
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள ஜாபா் சாதிக் மற்றும் அவரது சகோதரா் முகமது சலீம் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா தெரிவித்துள்ளாா்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிா்வாகியுமான ஜாபா் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து, கடந்த ஜூன் 26-ஆம் தேதி கைது செய்தது.
பின்னா் அவரது சகோதரா் முகமது சலீம் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டாா். இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜாபா் சாதிக் மற்றும் அவரது சகோதரா் முகமது சலீம் தாக்கல் செய்த மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான அமலாக்க துறை சிறப்பு வழக்குரைஞா் என்.ரமேஷ், இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 19-ஆம் தேதி சிபிஐ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அதற்கு முன்பாகவே சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினாா். இதையடுத்து, மனு நிலுவையில் இருந்தபோது எப்படி மனு தாக்கல் செய்யப்பட்டது? என கேள்வி எழுப்பிய நீதிபதி இந்த வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாகத் தெரிவித்தாா்.