Arittapatti Rock
அரிட்டாபட்டி...தினமணி

டங்ஸ்டன் சுரங்க இடம் மறுஆய்வு: நடந்தது என்ன? மத்திய அரசு அறிவிப்பு

பல்லுயிர்ப் பகுதிகளை தவிர்த்துவிட்டு மற்ற இடங்களை ஆய்வு செய்ய மத்திய அரசுபரிந்துரை செய்துள்ளது.
Published on

நமது சிறப்பு நிருபர்

மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமையவுள்ள இடத்தை மறுஆய்வுக்கு உட்படுத்துமாறு இந்திய புவியியல் ஆய்வு மையத்தை (ஜிஎஸ்ஐ) கேட்டுக் கொண்டுள்ளதாக மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்துக்கு சமீப காலமாக கடும் ஆட்சேபம் தெரிவித்து வரும் தமிழக அரசு, கடந்த டிச. 9-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரிலும் டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்திலும் தமிழக எம்.பி.க்கள் இந்தப் பிரச்னையை எழுப்பினர். தில்லியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் கடந்த வாரம் மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷண் ரெட்டியை சந்தித்து டங்ஸ்டன் எதிர்ப்பு நிலை குறித்து விளக்கினர்.

இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்க ஏல நடைமுறை விவகாரத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த நிகழ்வுகளை தொகுத்து மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய புவியியல் ஆய்வு மையம், மதுரை மாவட்டத்தில் உள்ள மேலூர் - தெற்குத்தெரு - முத்துவேல்பட்டி பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கான புவியியல் புரிந்துணர்வு (ஜிஎம்) உடன்பாட்டை 2021, செப். 14-இல் வெளியிட்டபோது, டங்ஸ்டன் உள்பட அனைத்து முக்கிய கனிம வளங்களையும் ஏலம் விடும் அதிகாரம் மாநில அரசிடமே இருந்தது.

பின்னர் சுரங்கம் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957-இல் திருத்தம் செய்யப்பட்டு 2023-இல் கொண்டு வரப்பட்ட திருத்தச்சட்டம் 2023, ஆக.17-இல் அமலுக்கு வந்தது. இச்சட்டத்தின் 11டி பிரிவின்படி டங்ஸ்டன் உள்ளிட்ட மிக முக்கிய கனிமங்களை பிரத்யேகமாக ஏல குத்தகைக்கு விடும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு.

தமிழக அரசு மீது குற்றச்சாட்டு: இந்த திருத்தச்சட்டத்தின்படி, தமிழக அரசுக்கு 2023, செப்.15-இல் மத்திய அரசு அனுப்பிய கடிதத்துக்கு 2023, அக். 3-இல் தமிழக நீர்வளத்துறை அனுப்பிய பதில் கடிதத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பியதுடன், மாநிலத்தில் உள்ள முக்கிய கனிமங்களை ஏலத்தில் விடும் அதிகாரம் மாநிலத்திடமே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியது.

2021 - 23ஆண்டுகளில் முக்கிய கனிமங்களை ஏலத்தில் விடும் அதிகாரம் மாநிலத்திடம்தான் இருந்தது. அப்போது தமிழக அரசு எதுவும் செய்யவில்லை. ஏல உரிமம் வழக்கம் தொடங்கப்பட்டது முதல் கடந்த ஒன்பது ஆண்டுகளில் ஒரு கனிம வளத்தை கூட தமிழக அரசு ஏலத்தில் விடவில்லை.

இந்நிலையில், நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்கம் உள்ளிட்ட முக்கிய கனிமங்களை ஏலத்தில் விடும் நடைமுறையை தொடருவதாக தமிழக தலைமைச் செயலருக்கு 2023, டிச.6-இல் மத்திய சுரங்கத் துறை செயலர் கடிதம் அனுப்பினார். அதில் நாயக்கர்பட்டி உள்ளிட்ட இடங்களில் அமையவுள்ள மூன்று சுரங்க இடங்கள் குறித்த தகவலை கேட்டார். அந்த தகவல்களை தமிழக புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் 2024, பிப். 8-ஆம் தேதியிட்ட கடிதம் வாயிலாக வழங்கினார். சுரங்கம் அமையவுள்ள 193.215 ஹெக்டேரில் (மொத்த சுரங்க இடத்தில்10 சதவீதம்) பல்லுயிரி பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு கூறினாலும், ஒட்டுமொத்த ஏலத்துக்கு எதிராக பரிந்துரை செய்யவில்லை.

இந்நிலையில், மத்திய சுரங்கத் துறை இதுநாள் வரையில் 24 பகுதிகளாக ஏலம் விடும் நடைமுறையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. 20.16 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட நாயக்கர்பட்டி டங்ஸ்டன் சுரங்க பகுதிக்கான கூட்டு உரிம ஏலம் கடந்த பிப்ரவரியில் முன்மொழியப்பட்டு அறிவிக்கையில் அது வெளியிடப்பட்டது. இரண்டாம் முயற்சியாக கடந்த ஜூனில் விடப்பட்ட ஏலத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் 2024, நவ. 7-ஆம் தேதி ஏலதாரராக தேர்வானது. இந்த விஷயத்தில் முதலாவதாக கடந்த பிப்ரவரியிலும், பின்னர் நவம்பரிலும் ஏலம் நடந்தபோது தமிழக அரசிடம் இருந்து எவ்வித ஆட்சேபமோ கவலைகளோ தெரிவிக்கப்படவில்லை. மாறாக, ஏலம் தொடர்பாக மத்திய சுரங்கத்துறை 2024 பிப்ரவரி முதல் நவம்பர் வரை நடத்திய கூட்டங்களில் தமிழக அரசும் பங்கெடுத்தது.

வருவாய் அனைத்தும் மாநிலத்துக்கே: தேசத்தின் பொருளாதார வளர்ச்சி நலன்களைக் கவனத்தில் கொண்டு முக்கிய கனிமங்களை ஏலத்தில் விடுவது மட்டுமே மத்திய சுரங்கத் துறையின் பங்கு. எனவே, சுரங்கம் அமைப்பதற்கான விருப்பக் கடிதம், உரிமம் வழங்கலில் கையொப்பமிடுவது, சுரங்க குத்தகை போன்றவற்றை மாநில அரசுதான் மேற்கொள்ளும். சுரங்கப் பணிகள் தொடங்கியதும் அதில் இருந்து கிடைக்கும் அனைத்து வருவாயும் மாநிலத்துக்கே செல்லும்.

மறு ஆய்வு: எனினும், விருப்ப ஏலதாரர் தேர்வு அறிவிக்கப்பட்ட பிறகு, சுரங்கம் அமைய தேர்வான பகுதியில் பல்லுயிரி வரலாற்றுத் தலம் இருப்பதாக ஏராளமான மனுக்கள் மத்திய அரசுக்கு வந்தன.

எனவே, பல்லுயிரி தலம் நீங்கலாக மற்ற இடங்களில் சுரங்கம் அமைக்கும் சாத்தியக்கூறுகளை மறுவரையறை செய்து திட்டத்தை மறுஆய்வு செய்யுமாறு இந்திய புவியியல் ஆய்வு மையத்தை மத்திய சுரங்கத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், நாயக்கர்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான விருப்பக் கடிதத்தை ஏலதாரருக்கு வழங்கும் நடைமுறையை தற்போதைக்கு நிறுத்தி வைக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com