
தமிழகத்தில் பேரழிவை ஏற்படுத்திய சுனாமி தாக்கி இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
தமிழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடி முடித்த பலரும் அடுத்த நாளின் விடியல் தங்களுக்கு மிகப் பெரிய துயரத்தை ஏற்படுத்தும் என நினைத்திருக்க மாட்டார்கள்.
கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் 2004 டிசம்பர் 26-ஆம் தேதி இதே நாளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களை ஆழிப் பேரலை (சுனாமி) தாக்கியது.
அதன் கோரத் தாண்டவத்தை இன்றைக்கு நினைத்தாலும் நெஞ்சை நடுங்க வைக்கும். சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கானோர் வாழ்க்கையை சுனாமி பறித்தது.
இத்தனை ஆயிரம் உயிர்களை ஒரே நாளில் பலிகொண்ட முதல் இயற்கைப் பேரிடராக பார்க்கப்பட்டது. உலகின் வேறெந்த பகுதிகளிலும் அதற்கு முன்னர் இப்படியொரு பேரழிவை ஒரே நாளில் சந்தித்தது இல்லை.
2004 டிசம்பர் 26 காலை இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 9.3 ஆகப் பதிவானது. சுமார் 10 நிமிடங்கள் வரை நிலநடுக்கம் நீடித்துள்ளது. இதுபோன்ற நிலநடுக்கம் எங்கேயும் பதிவானது கிடையாது.
கடலுக்கு அடியில் 30 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால், சுனாமி ஏற்பட்டது. சுமார் 40 முதல் 50 மீட்டர் உயரத்துக்கு அலைகள் எழும்பி கரையோர மக்களின் உயிர்களை பறித்தது.
லட்சக்கணக்கானோர் பலி
இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, இந்தியா, இலங்கை உள்ளிட்ட 11 நாடுகளில் 2.30 லட்சம் பேரை இந்த சுனாமி பலி கொண்டது. தமிழகத்தில் சென்னை, கடலூர், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் 7 ஆயிரம் பேர் பலியாகினர். இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்தது.
பல்லாயிரக்கணக்கானோர் உடைமைகளை இழந்தனர். தாய், தந்தையரை இழந்து நூற்றுக்கணக்கான குழந்தைகள் அனாதையாயினர். பல்வேறு நிவாரணப் பணிகளை அரசும், சர்வதேசத் தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டாலும், பாதிக்கப்பட்ட மக்கள் இன்றளவும் உறவினர்களை இழந்த சோகத்தில் தவித்து வருகின்றனர்.
சுனாமி தாக்கி இன்றுடன் 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், சென்னை முதல் குமரி வரையிலான கடற்கரை கிராமங்களில் இன்று அஞ்சலி நிகழ்வுகள் அனுசரிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.