ஆண்டுதோறும் டிசம்பரில் "திருக்குறள் வாரம்': முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

"ஆண்டுதோறும் டிசம்பர் கடைசி வாரம் குறள் வாரமாக கொண்டாடப்படும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
ஆண்டுதோறும் டிசம்பரில் "திருக்குறள் வாரம்': முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
Updated on
2 min read

"ஆண்டுதோறும் டிசம்பர் கடைசி வாரம் குறள் வாரமாக கொண்டாடப்படும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

ஆண்டுதோறும் 133 உயர்கல்வி நிறுவனங்களில், திருக்குறள் தொடர்பான கலை இலக்கிய அறிவுசார் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள், திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டு, திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா வளைவுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர், திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுத் தொகை வழங்கி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

முக்கடல் சூழும் குமரிமுனையில், முப்பால் புலவர் வள்ளுவருக்கு கருணாநிதி வைத்த சிலையைப் போற்றக்கூடிய வெள்ளிவிழாவை திராவிட ஆட்சியில் நடத்தி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்நாளில் என் சிறந்த நாளாக தமிழின் பெருமையை, குறளின் அருமையை இளைய தலைமுறைக்கு கொண்டுசெல்லும் கடமையை நிறைவேற்றியதாக மகிழ்ச்சி அடைகிறேன்.

25 ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சிலையைத் திறந்து வைத்தபோது, தன்னுடைய உடல் நடுங்கியதாக கருணாநிதி கூறினார். ஏனென்றால், அந்த அளவுக்கு உணர்ச்சிப் பெருக்கத்தில் அவர் இருந்தார். வான்புகழ் வள்ளுவருக்கு வானுயரச் சிலை அமைக்க வேண்டும் என்பது அவருடைய நெடுங்கனவு. அந்தக் கனவு நனவான மகிழ்ச்சி அவருக்கு அந்த உணர்வைத் தந்தது.

இப்போது, திருவள்ளுவர் சிலையின் வெள்ளி விழாவை நடத்துவது எனக்குப் பெருமையாக இருக்கிறது. எவ்வளவு பெரிய சாதனையைச் செய்துவிட்டு, நமக்கு இப்படி ஒரு வரலாற்று வாய்ப்பை கருணாநிதி உருவாக்கித் தந்துவிட்டுப் போயிருக்கிறார் என்ற எண்ணம்தான் அந்தப் பெருமைக்கு காரணம்.

திருவள்ளுவர் சிலை அமைத்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று சொன்னவுடன், அதற்கு பெரிய விழா நடத்த வேண்டும் என்று சொன்னேன். உடனே சிலர், ஒரு சிலை அமைத்ததற்கு எதற்கு விழா நடத்த வேண்டும் என்று கேட்கத் தொடங்கினார்கள். அவர்கள் கேள்வியில் அர்த்தம் கிடையாது; ஆனால், உள்ளர்த்தம் இருக்கிறது. அவர்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை.

திருக்குறள் வாரம்: ஒவ்வொரு மாவட்டத்திலும் திருக்குறளில் ஆர்வமும், புலமையும்மிக்க ஆசிரியர்கள், பயிற்றுநர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பயிற்சி வழங்கி மாவட்டம்தோறும் தொடர் பயிலரங்குகள், பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.

"திருக்குறள் திருப்பணிகள்' தொடர்ந்து நடைபெற திட்டம் வகுக்கப்படும். இதற்காக, ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

ஆண்டுதோறும் 133 உயர்கல்வி நிறுவனங்களில், திருக்குறள் தொடர்பான கலை இலக்கிய அறிவுசார் போட்டிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்தப்படும்.

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் கடைசி வாரம் 'குறள் வாரம்' கொண்டாடப்படும்.

தமிழ்த் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான திருக்குறள் மாணவர் மாநாடு ஆண்டுதோறும் நடத்தப்படும்.

தென்கோடியில் வள்ளுவர் சிலையால் சிறப்பு பெற்றிருப்பதோடு, சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் கன்னியாகுமரி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

முக்கடல் சூழும் குமரிமுனையில் இருந்து சுற்றுலாப் பயணிகள் திருவள்ளுவர் சிலையைச் சென்றடைய படகு சவாரி வசதியை மேம்படுத்துவதற்காக 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும். அந்தப் படகுகளுக்கு காமராஜர், மார்ஷல் நேசமணி, ஜி.யு. போப் பெயர்கள் சூட்டப்படும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.

"தமிழர்களுக்கான உலக அடையாளம்'

"திருவள்ளுவர், தமிழர்களுக்கான உலக அடையாளம். திருக்குறள் தமிழர்களின் பண்பாட்டு அடையாளம். அதனால் கொண்டாடுகிறோம்.

தமிழ்நெறியின் அடையாளமாக, சுனாமியையும் எதிர்த்து உயர்ந்து நிற்கிற இந்த வள்ளுவர் சிலைதான், நம்முடைய அடையாளத்தின் பண்பாட்டுக் குறியீடு. இந்தக் கம்பீர வள்ளுவர் சிலைக்கு கருணாநிதி காரணகர்த்தா என்றால், சிற்பக் கலைஞர் கணபதி ஸ்தபதிதான் கலைகர்த்தா.

இந்தச் சிலை திருக்குறளின் அதிகாரங்களை குறிக்கிற வகையில் 133 அடி உயரம் கொண்டது. அதில், அறத்துப்பால் அதிகாரங்களைக் குறிக்கிற வகையில் 38 அடி பீடம். அறம் என்ற பீடத்தில் பொருளும் இன்பமுமாக 95 அதிகாரங்கள் சிலையாக இருக்கிறது. 7,000 டன் எடை கொண்ட இந்தச் சிலையில் 3,681 கற்கள் இருக்கின்றன.

திருவள்ளுவர் வெறும் சிலையல்ல; திருக்குறள் வெறும் நூல் அல்ல; நம்முடைய வாழ்க்கைக்கான வாளும் கேடயமும். அது நம்மைக் காக்கும், நம்மை அழிக்க வரும் தீமைகளைத் தடுக்கும். காவி சாயம் பூச நினைக்கிற தீய எண்ணங்களை விரட்டியடிக்கும்.

பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் திருக்குறளை இன்னும் அதிகமாக இடம்பெறச் செய்ய வேண்டும். தனியார் நிறுவனங்களும் இதைப் பின்பற்ற வேண்டும்' என்றார் முதல்வர் ஸ்டாலின்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com