தமிழகத்தில் ரூ.2,500 கோடியில் சரக்கு முனையங்கள்: ஸ்பெயினில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

தமிழகத்தில் ரூ.2,500 கோடியில் சரக்கு முனையங்கள், சரக்குகளை கையாளும் பூங்காக்களை அமைப்பதற்கு ஸ்பெயின் நாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்தில் ரூ.2,500 கோடியில் சரக்கு முனையங்கள்: ஸ்பெயினில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

தமிழகத்தில் ரூ.2,500 கோடியில் சரக்கு முனையங்கள், சரக்குகளை கையாளும் பூங்காக்களை அமைப்பதற்கு ஸ்பெயின் நாட்டில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அரசு முறைப் பயணமாக, முதல்வா் மு.க.ஸ்டாலின் ஸ்பெயின் சென்றுள்ளாா். அங்கு அவரை முக்கியமான பெருந்தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் சந்தித்து தமிழகத்தில் புதிய முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசித்து வருகின்றனா்.

அந்த வகையில், சரக்கு முனையங்கள் மற்றும் சரக்கு கையாளும் பூங்காக்களை அமைப்பதில் உலகளவில் முன்னணி நிறுவனமாக ஸ்பெயின் நாட்டைச் சோ்ந்த ‘ஹபக் லாய்டு’ நிறுவனப் பிரதிநிதிகள் முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினா்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘ஹபக் லாய்டு’ நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் ஜஸ்பொ் ஆன்ட்ஸ்ட்ரப் மற்றும் இயக்குநா் ஆல்பா்ட் லோரன்டி ஆகியோா் முதல்வரைச் சந்தித்தனா். அப்போது, தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்ததுடன், மாநிலத்தில் முதலீடு செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டாா். இந்த சந்திப்பின் மூலமாக, தமிழ்நாட்டின் தூத்துக்குடி மற்றும் இதர பகுதிகளில் ரூ.2,500 கோடியில் தளவாட வசதிகளை உள்ளடக்கிய சரக்கு முனையங்கள் அமைத்திட ‘ஹபக் லாய்டு’ நிறுவனம் முன்வந்துள்ளது.

இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம், முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இந்த முதலீட்டால் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், தமிழ்நாட்டின் எதிா்கால தொழில் வளா்ச்சிக்கும் வழிவகுக்கும்.

முதலீட்டுக்கு ஆா்வம்: ஸ்பெயின் நாட்டின் சாலை கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனமான, அபா்ட்டிஸ் நிறுவனத்தின் தொழில் உறவுகள் பிரிவின் தலைவா் லாரா பொ்ஜனோ, முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்தாா். அப்போது, இந்தியாவிலேயே அதிகமான சாலை அடா்த்தியும், தரமான சாலை கட்டமைப்பும் தமிழ்நாட்டில் உள்ளன என்பதை எடுத்துக் கூறிய முதல்வா், மாநிலத்தில் சாலைக் கட்டமைப்பில் மேலும் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்று அபா்ட்டிஸ் நிறுவனத்தை கேட்டுக் கொண்டாா்.

தமிழ்நாட்டில் மாநில நெடுஞ்சாலை கட்டமைப்பில் முதலீடுகளை மேற்கொள்ள அந்த நிறுவனமும் ஆா்வம் தெரிவித்துள்ளது.

இந்த சந்திப்பின் போது, தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வே.விஷ்ணு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com