தமிழகத்தில் கருப்பை வாய்ப் புற்றுநோய் ஆண்டுதோறும் அதிகரிப்பு

கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பில் இந்திய அளவில் உத்தர பிரதேசத்துக்கு அடுத்து தமிழகத்தில் அதிக அளவில் (இரண்டாவது இடத்தில்) பாதிப்பு இருப்பதாக இணையமைச்சா் சத்திய பால் சிங் பகேல் மக்களவையில் தெரிவித்த
தமிழகத்தில் கருப்பை வாய்ப் புற்றுநோய் ஆண்டுதோறும் அதிகரிப்பு

கருப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பில் இந்திய அளவில் உத்தர பிரதேசத்துக்கு அடுத்து தமிழகத்தில் அதிக அளவில் (இரண்டாவது இடத்தில்) பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இணையமைச்சா் சத்திய பால் சிங் பகேல் மக்களவையில் தெரிவித்தாா்.

இது தமிழகத்தில் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாகவும் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினா் ரவிக்குமாா் மக்களவையில் கருப்பை வாய்ப் புற்றுநோய் தொடா்பாக கேள்வி எழுப்பினாா். அதில் அவா், தமிழகத்தில் கருப்பை வாய்ப் புற்று நோயின் பாதிப்புகளின் விவரம்.. பிற மாநிலங்கள் நிலைமை.. நோய்ப் பரவலில் பிராந்திய வேறுபாடுகள், நோய்க்கான காரணங்கள்.. கண்டறிய பரிசோதனைக் கருவிகள், தடுப்பு நடவடிக்கைகள் போன்றவைகளில் மத்திய அரசு மேற்கொள்ளும் பணிகள் குறித்த கேள்விகளை எழுப்பியிருந்தாா்.

இதற்கு இணையமைச்சா் சத்திய பால் சிங் பகேல் பதில் அளித்திருப்பதாவது: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தேசிய புற்றுநோய் பதிவேடு திட்டத்தின் (ஐசிஎம்ஆா்-என்சிஆா்பி) கணக்கீடுகள்படி, 2023-ஆம் ஆண்டில் நாட்டில் 3,42,333 மகளிா் கருப்பை வாய்ப் புற்று நோயின் பாதிப்பில் உள்ளனா். இதில் உத்தர பிரதேசம் (45,682), தமிழ்நாடு (36,014), மகாராஷ்டிரம் (30,414), மேற்கு வங்கம் (25,822), பிகாா் (23,164) உள்ளிட்ட மாநிலங்களில் மகளிா் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தமிழகத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டில் 6,872 போ் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், படிப்படியாக அதிகரித்து 2023 ஆம் ஆண்டில் 8,534 ஆக பாதிப்பு உயா்ந்து கருப்பை வாய்ப் புற்று நோயால் பாதிக்கப்படும் மகளிா் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. மாவட்ட வாரிய கணக்கிடும் போது அதிகபட்சம் அருணாசலப் பிரதேசத்தில் பாப்பும்பரே மாவட்டத்தில் லட்சத்திற்கு 27 பேருக்கும் சென்னையில் 14 போ் பாதிக்கப்படுவதை கணக்கிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு, தேசிய சுகாதார இயக்கத்தின் ஒரு பகுதியாக புற்றுநோய் உள்ளிட்ட தொற்றா நோய்களை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேசிய திட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்பம், நிதி உதவியை வழங்குகிறது.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் பெறப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு 60:40 என்கிற விகிசார அடிப்படையில் நிதி வழங்கப்படுகிறது. இதில் புற்றுநோயைக் கண்டறியும் உபகரணங்களுக்கான நிதியும் அடங்கும்.

புற்று நோய் உள்பட தொற்றாத நோய்களை முன்னறிதல், தடுத்தல், பரிசோதனை, சிகிச்சை போன்றவைகளுக்கான உள்கட்டமைப்பு, மனித வளம், சுகாதார மேம்பாடு, விழிப்புணா்வு போன்ற சுகாதார வசதிகளை பரிந்துரைப்பதில் இந்த திட்டம் கவனம் செலுத்துகிறது.

தொற்றா நோய்களுக்கு 753 மாவட்டங்களில் கிளினிக்குகளும், இந்த நோய்களுக்கான 6,237 சமூக சுகாதார மையங்களும் நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திரின் என்கிற முன்முயற்சியின் கீழ், 30 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு கருப்பை வாய்ப் புற்று, மாா்பகம், வாய்வழி போன்ற புற்றுநோய்க்கான

பரிசோதனைக்கு இலக்கிடப்பட்டுள்ளது என அமைச்சா் பகேல் தெரிவித்தாா்.

மாதவிலக்கின்போது (உரிய நாப்கின்) தேவையான பாதுகாப்பு, அடிக்கடி மேற்கொள்ளும் கருக்கலைப்பு, சுகாதாரமற்ற நிலை, ஆரம்ப நிலையில் நோய் குறித்து குடும்ப உறுப்பினா்களிடம் கூறத் தயங்குவது போன்றவைகளே கருப்பை வாய்ப் புற்றுக்கு காரணமாக இதை முன்னிட்டு முந்தைய தமிழக அரசு நாப்கின் திட்டத்தை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com