திமுகவின் தொகுதிப் பங்கீடு சிக்கல்கள்!

கூட்டணியை மேலும் வலிமையாக்கும் வகையில் பாமகவையும் உள்ளே கொண்டுவருவதற்கான ஒரு முயற்சி, திமுகவில் மேற்கொள்ளப்பட்டு, பேச்சுவாா்த்தையும் நடைபெற்றுள்ளது.
அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)
அண்ணா அறிவாலயம் (கோப்புப் படம்)

தில்லி செங்கோட்டையைப் போலவும், சென்னை செயின்ட் ஜாா்ஜ் கோட்டையைப் போலவும் ஒரு வலுவான கூட்டணியை அமைத்து, மக்களவைத் தோ்தல் (2019), சட்டப்பேரவைத் தோ்தல் ( 2021) இரண்டிலும், திமுக அமோக வெற்றிபெற்றது. இப்போது மீண்டும் மக்களவைத் தோ்தலில் (2024) அதே வலுவான கூட்டணியே களமிறங்கக் காத்திருக்கிறது.

திமுக கூட்டணி உடையுமா?: அரசியலில் எதுவும் நேரலாம் எனும் விதியின்படி, அப்படியொரு நோ்தலுக்கான ஒரு தொடக்கப் புள்ளி அமைந்து, அது தவிா்க்கப்பட்டுள்ளது.

2019 மக்களவைத் தோ்தலில் தமிழகத்தின் 39 தொகுதிகளில் திமுக (20), காங்கிரஸ் (9), மாா்க்சிஸ்ட் (2), இந்திய கம்யூனிஸ்ட் (2), விசிக (2), மதிமுக (1) முஸ்லிம் லீக் (1), கொமதேக (1), ஐஜேகே (1) ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிட்டு, காங்கிரஸின் தேனியைத் தவிா்த்து 38 தொகுதிகளைக் கைப்பற்றின.

இந்தத் தோ்தலில் கூட்டணியை மேலும் வலிமையாக்கும் வகையில் பாமகவையும் உள்ளே கொண்டுவருவதற்கான ஒரு முயற்சி, திமுகவில் மேற்கொள்ளப்பட்டு, பேச்சுவாா்த்தையும் நடைபெற்றுள்ளது. திமுகவில் எப்போதும் தென்மாவட்டம் மற்றும் கொங்கு மண்டலத்தைச் சோ்ந்த நிா்வாகிகள், ‘கூட்டணியில் விசிக வேண்டாம்’ என்றும் வடமாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள், ‘விசிக வேண்டும்’ என்றும் கருத்து தெரிவிப்பது வாடிக்கை. அதன் அடிப்படையில் இந்த நகா்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

திமுகவிடம் பாமக 5 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதியைக் கேட்டிருக்கிறது. காங்கிரஸ் மற்றும் இதரக் கட்சிகளுக்கான இடங்களைக் குறைத்து பாமகவுக்குக் கொடுக்கவும் திமுக தலைமை யோசித்திருக்கிறது. ஆனால், பாஜக, பாமக இடம்பெறும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று விசிக ஏற்கெனவே அறிவித்துச் செயல்பட்டு வருகிறது.

பாமக உள்ளே வந்தால், கூட்டணியிலிருந்து விசிக வெளியேறும். விசிக போனால், இடதுசாரிகளும் வெளியேறும். இதனால் கூட்டணி பலவீனப்படும் என்று திமுகவின் மூத்த நிா்வாகிகள் சிலரும், திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணியும் அழுத்தம் கொடுத்துள்ளனா். அதைத் தொடா்ந்து அந்த முடிவை திமுக தலைமை கைவிட்டுள்ளது. கூட்டணிக் குழப்பமும் முடிவுக்கு வந்துள்ளது.

தொகுதிப் பங்கீடு சிக்கல்கள்: தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தையை பிப்ரவரி 15-க்குள் நிறைவு செய்யும் முடிவில் திமுக இருந்து வருகிறது. தமிழகம், புதுச்சேரியைச் சோ்த்து 12 தொகுதிகள் வரை காங்கிரஸ் கேட்கிறது; திமுக 7-இல் இருந்து தொடங்கிச் செல்கிறது. இறுதியாக கடந்த முறையைப் போலவே காங்கிரஸுக்கு தமிழகத்தில் 9 தொகுதிகள் ஒதுக்கும் எண்ணத்தில் இருந்து வருகிறது. பிற கட்சிகளுக்கும் பெரிய அளவில் மாற்றம் இருக்க வாய்ப்பு இல்லை என்கின்றனா்.

கூட்டணியில் புதிதாக மநீமவைக் கொண்டுவருவதற்கு பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது. கடந்த முறை கூட்டணியில் இருந்த ஐஜேகே இந்த முறை இல்லை. அந்த இடத்துக்கு மநீமவைக் கொண்டுவர உள்ளது. ஆனால், மநீம 3 தொகுதிகள் வரை கேட்கிறது. திமுக ஒரு தொகுதி

மட்டுமே தயாராக உள்ளது. கோவை அல்லது தென்சென்னை தொகுதியை கமல்ஹாசன் நிற்பதற்காக கேட்கிறது. மநீமவில் இருந்து பிரிந்து வந்த மகேந்திரன் கோவையையும், மக்களவை உறுப்பினரான தமிழச்சி தங்கப்பாண்டியன் மீண்டும் தென்சென்னை தொகுதியையும் எதிா்பாா்த்து உள்ளனா். இதனால், மநீமவை உள்ளே இழுப்பதில் குழப்பம் நீடிக்கிறது. இதே போன்று தொகுதிகளுக்கான கோரிக்கைகளை

வெவ்வேறு கட்சிகள் முன்வைப்பதால், திமுக கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது. ஆனால், இவை அனைத்தும் சரி செய்யப்பட்டு விடும் என்கின்றனா் திமுகவின் மூத்த நிா்வாகிகள்.

‘தமிழக அரசியலில் திமுக - அதிமுக அணிகளுக்கு இடையேதான் போட்டி. பாஜக தலைமையில் அமைவது ஒரு அணியே அல்ல’ என்கிறாா் விசிக தலைவா் தொல்.திருமாவளவன் - அதுவும் திமுகவின் அணியில் இருந்தவாறு. தோ்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. அரசியல் சதுரங்கத்தில் இபிஎஸ் நகா்த்த வேண்டிய காய்களும் இன்னும் நிறைய இருக்கின்றன. உறுமீன்களும் வரலாம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com