சென்னையின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்திட  ரூ.25 கோடி ஒதுக்கீடு!

சென்னையில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
சென்னையின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை மேம்படுத்திட  ரூ.25 கோடி ஒதுக்கீடு!
Published on
Updated on
2 min read

சென்னை: சென்னையில் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.25 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,  சென்னை மாநகரின் விளையாட்டு உள்கட்டமைப்புகளை சா்வதேச அளவில் மேம்படுத்திட ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழ்நாட்டு இளைஞர்களிடையே விளையாட்டுத் திறன்களை வளர்ப்பதிலும், தமிழ்நாட்டில் சர்வதேசத் தரத்திலான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும்  தனிக் கவனம் செலுத்துவதற்காக முதன் முதலில் விளையாட்டுத் துறைக்கென ஒரு தனி அமைச்சர் பதவியை 9.12.1999 அன்று ஏற்படுத்தியும், தலைமைச் செயலகத்தில் விளையாட்டுத் துறையை ஒரு மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின்கீழ் தனித்துறையாக 2000 ஆண்டு ஜூன் திங்களில் ஏற்படுத்தியும் முன்னாள் முதல்வர் கருணாநிதி விளையாட்டுத் துறை  வளர்ச்சிக்கு ஊக்கமளித்தார்.  

அதனைத் தொடர்ந்து, 2021-இல் பொறுப்பேற்ற முதல்வா் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுக் கட்டமைப்புகளை ஒவ்வொரு விளையாட்டுக்கும் ஏற்படுத்திட வேண்டும் என்று முனைப்புடன் ஈடுபட்டுள்ளாா்.

அதற்கு ஏற்ப  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் தமிழ்நாட்டின் விளையாட்டுக் கட்டமைப்புகளை உருவாக்குவதில் மிகுந்த ஆர்வத்துடன் செயலாற்றி வருகிறார்.

சா்வதேச விளையாட்டுப் போட்டிகளைத் தமிழகத்தில் நடத்துவதற்கு மிகுந்த ஆா்வம் கொண்டு மத்திய அரசின் ஒப்புதலோடு பிரதமா் மோடியை அழைத்து 2022-இல் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் நடத்தப்பட்டு உலக அளவில் பாராட்டுகளைப் பெற்றது.

இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் முயற்சியால் சமீபத்தில் கேலோ இந்தியா 2023 விளையாட்டுப் போட்டிகள், நந்தம்பாக்கம் வா்த்த மையத்தில் பிரதமா் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டு ஏறத்தாழ 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளையாட்டு வீரா்கள் பங்கேற்று, வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளன. இந்தப் போட்டியில் 38 தங்கப் பதக்கங்கள் பெற்று, தமிழகம் பதக்கப்பட்டியலில் 2-ஆம் இடம் பெற்று, மாபெரும் சாதனை நிகழ்ந்துள்ளது.

2023 - 2024 ஆம் ஆண்டுக்கான இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கையின்போது, அமைச்சா் உதயதிநிதி ஸ்டாலின் சென்னையில் உள்ள ஐந்து முக்கிய விளையாட்டரங்கங்களில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகள் ரூ.25 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைத்து மேம்படுத்தப்படும் என அறிவித்தாா்.

அந்த அறிவிப்புகளைச் செயல்படுத்தும் வகையில்,சென்னை மாநகரில் உள்ள 25 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையான விளையாட்டு உள்கட்டமைப்புகளைச் சா்வதேச தரத்துக்கு உயா்த்தி மேம்படுத்திட மேயா் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கம் ரூ.11.34 கோடி மதிப்பீட்டிலும், ஜவஹா்லால் நேரு விளையாட்டு அரங்கம் ரூ.5.71 கோடி மதிப்பீட்டிலும், ஜவா்ஹா்லால் நேரு உள் விளையாட்டு அரங்கம் ரூ.2.35 கோடி மதிப்பீட்டிலும், வேளச்சேரி நீச்சல்குளம் வளாகம் ரூ.4.72 கோடி மதிப்பீட்டிலும்,நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கம் ரூ.88 லட்சம் மதிப்பீட்டிலும் மேம்படுத்தப்பட மொத்தம் ரூ.25 கோடி நிதி வழங்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இது இந்திய விளையாட்டுத்துறையின் தலைமையகமாக  தமிழ்நாட்டை உருவாக்கிட முனைந்திடும் முதல்வா் மு.க.ஸ்டாலின் உயர்ந்த நோக்கத்திற்கு ஒரு சீரிய சான்றாகும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com