மத சிறுபான்மையினர் வாக்குகள் யாருக்கு? 

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மத சிறுபான்மையினர் வாக்குகளைக் குறிவைத்து திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் மேற்கொண்டு வரும் அரசியல் நகர்வுகள் உற்று கவனிக்கப்பட்டு வருகின்றன.
மத சிறுபான்மையினர் வாக்குகள் யாருக்கு? 
Published on
Updated on
3 min read


எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மத சிறுபான்மையினர் வாக்குகளைக் குறிவைத்து திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சிகள் மேற்கொண்டு வரும் அரசியல் நகர்வுகள் உற்று கவனிக்கப்பட்டு வருகின்றன.

எம்ஜிஆர்-கருணாநிதி காலத்தில் பெரும் பகுதி கிறிஸ்தவர்கள் எம்ஜிஆருக்கும், இஸ்லாமியர்களில் பெரும் பகுதியினர் கருணாநிதிக்கும் ஆதரவாக இருந்தனர். இந்தச் சூழல் 1996 வரை நீடித்தது. மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்ததுமுதல் மத சிறுபான்மையினர் தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு என்ற புள்ளியில் ஒருமுகமாக வாக்களித்து வருகின்றனர்.

1998-இல் அதிமுக, மதிமுக, பாமக, பாஜக கூட்டணிக்கு எதிராக இருந்த சிறுபான்மையினர் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கும், 1999-இல் திமுக, மதிமுக, பாமக, பாஜக அணிக்கு எதிராக இருந்த சிறுபான்மையினர் அதிமுக-காங்கிரஸ் அணிக்கும் வாக்கு செலுத்தினர். அப்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் திமுக அங்கம் வகித்தது என்ற காரணத்துக்காகவே அதிமுக அணிக்கு ஆதரவாக சிறுபான்மை வாக்குகள் கிடைத்தன. இதனால் ஜெயலலிதா 2001-இல் மீண்டும் 
ஆட்சியைப் பிடித்தார். 

1996-2001 வரை கருணாநிதி பெரும் அதிருப்தியற்ற ஆட்சியைக் கொடுத்தபோதும் அதை 2001 தேர்தலில் தக்க வைக்க முடியாததற்கு சிறுபான்மை வாக்குகளை அவர் இழந்ததே முக்கியக் காரணம் என்ற கருத்து உள்ளது.

2004 மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்திய கருணாநிதி, மதிமுக, பாமக, இடதுசாரிகள் என மிகப்பெரிய அணியை அமைத்தார். அப்போதிருந்த அதிமுக-பாஜக அணிக்கு எதிராக திமுக அணிக்கு சிறுபான்மை வாக்குகள் கிடைத்ததால் திமுக அணி 39 தொகுதிகளில் வென்றது.

2004-இல் பாஜகவுடன் கூட்டணி வைத்த காரணத்தால் ஜெயலலிதாவுக்கு 2006 பேரவைத் தேர்தலிலும் சிறுபான்மை வாக்குகள் கிடைக்கவில்லை. மாறாக, சிறுபான்மை வாக்குகள் முழுமையாக திமுக-காங்கிரஸ் அணிக்கு பரிமாற்றம் ஆனதால்தான், தேமுதிக 8.7 சதவீத வாக்குகளைப் பிரித்த பின்னரும், கருணாநிதியால் மைனாரிட்டி ஆட்சி அமைக்க முடிந்தது.

2009 மக்களவைத் தேர்தலில் இலங்கையில் முள்ளிவாய்க்கால் சம்பவம், மின் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் எதிர்ப்பு அலை உருவான நிலையிலும், திமுக-காங்கிரஸ் கூட்டணி 27 தொகுதிகளில் வென்றதற்கு ஒட்டுமொத்த சிறுபான்மையினர் வாக்குகளும் திமுக கூட்டணிக்கு பரிமாற்றம் ஆனதுதான் முக்கியக் காரணம்.

அதேநேரத்தில், ஜெயலலிதாவுக்கு 2006, 2009 என இரண்டு தேர்தல்களுக்குப் பின்னர்தான் 2011 பேரவைத் தேர்தலில் சிறுபான்மையினர்  வாக்குகள் கிடைத்தன. 2014 மக்களவைத்தேர்தலில் திமுக-காங்கிரஸ் பிரிந்து நின்றதால் மோடிக்கு எதிராக கணிசமான சிறுபான்மையினர்  வாக்குகள் கிடைத்ததால்தான் தனித்து நின்ற அதிமுக 37 தொகுதிகளில் வென்றது. கோவை, வேலூர், திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு தொகுதிகளில் திமுக மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டதற்கு முக்கியக் காரணம் சிறுபான்மையினர் வாக்குகள் திமுகவை கைவிட்டதுதான்.

2016 பேரவைத் தேர்தலில் பாரம்பரிய கிறிஸ்தவ சிறுபான்மையினர் வாக்குகள் கிடைத்ததால்தான் ஒரு சதவீத வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவால் வெற்றி பெற முடிந்தது. ஆனால், 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் உருவானதால் சிறுபான்மையினர் வாக்குகள் சிந்தாமல், சிதறாமல் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பரிமாற்றம் ஆனது. இதுவே 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றதற்கான காரணம் என்ற ஒரு கருத்தும் உண்டு.

மேலும், 2021 பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக உறவு நீடித்த நிலையில் சிறுபான்மையினர் வாக்குகள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக கிடைத்ததால், அதிமுக 5.5 சதவீத வாக்கு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்தது. 13 சதவீத சிறுபான்மையினர் வாக்குகளில் குறிப்பிட்ட பகுதி அதிமுகவுக்கு பரிமாற்றம் ஆகியிருந்தால் ஆட்சியைப் பிடித்திருக்கலாம் என்பது எடப்பாடி பழனிசாமியின் கணக்கு.

இதனால்தான், 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவை அதிமுக கூட்டணியில் இருந்து விலக்கி வைத்தால் மட்டுமே, 2026 பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கான பாரம்பரிய சிறுபான்மையினர் வாக்குகளை சிந்தாமல் சேகரித்து மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என்ற கணக்குடன் எடப்பாடி பழனிசாமி அரசியல் நகர்வுகளைச் செய்து வருகிறார்.

இது குறித்து அதிமுக மீனவர் அணி மாநில இணைச் செயலர் பசலியான் "தினமணி' நிருபரிடம் கூறியது: ""பாஜக எதிர்ப்பு என்ற புள்ளியில் சிறுபான்மையினர் வாக்குகளை திமுக-காங்கிரஸ் இலவசமாக அறுவடை செய்கின்றன. சிறுபான்மையினர் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த திமுக-காங்கிரஸ் அவர்களை ஏமாற்றிவிட்டன. இப்போது எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் அதிமுக கூட்டணி வைத்துள்ளது. கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுவிக்கக் கோரி பேரவையில் எடப்பாடி பழனிசாமி குரல் கொடுத்துள்ளார். கோவை கருமத்தம்பட்டியில் கிறிஸ்தவ மாநாடு, மதுரையில் எஸ்டிபிஐ தலைமையில் இஸ்லாமிய மாநாடுகளில் பங்கேற்று சிறுபான்மையினர் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம். இந்த முறை சிறுபான்மையினர் திமுகவிடம் ஏமாறாமல் அதிமுகவை ஆதரிப்பார்கள்,'' என்றார்.
 

ஆனால், இந்தக் கூற்றை திமுக ஏற்கவில்லை. அக்கட்சியின் சிறுபான்மை பிரிவுத் தலைவர்  டி.பி.எம்.மைதீன்கான், "" திமுக அணியில் இடம் கிடைக்காத சில இஸ்லாமிய  கட்சிகளே அதிமுக  அணியில் உள்ளன. பாஜகவுடன் சேர்ந்து சிறுபான்மையினருக்கு எதிராக சிஏஏ சட்டத்துக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களித்துவிட்டு ஆட்சியை இழந்தவுடன் திடீர் அக்கறை காட்டும் அதிமுகவை சிறுபான்மையினர் நம்பமாட்டார்கள். திமுக தான் சிறுபான்மையினருக்கு எப்போதும் அரண். அதிமுக மட்டுமின்றி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சிலும் சிறுபான்மை இளைஞர்கள் மயங்கமாட்டார்கள்,'' என்றார்.

சிறுபான்மையினரைப் பொருத்தவரை 2004-இல் பாஜகவுடன் கூட்டணி வைத்த ஜெயலலிதாவுக்கு அவர்கள் 2006, 2009 தேர்தல்களில் வாக்களிக்கவில்லை; 2011-இல்தான் வாக்களித்தனர். அதேபோல, 1999, 2001 தேர்தல்களில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த கருணாநிதிக்கு, அடுத்து வந்த 2004 -இல் சிறுபான்மையினர் ஆதரவு கிடைக்க காங்கிரஸ் கூட்டணிதான் முக்கியக் 
காரணம்.

இந்த நிலையில், 5 ஆண்டுகள் பாஜகவுடன் கூட்டணி அமைத்த எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக, காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்களை விடுவிக்க வேண்டும் என பேரவையில் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார். ஆனால், கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு ஆதரவான ஹிந்துத்துவ வாக்காளர்களை இது பெரிதாக ஈர்க்கவில்லை என்ற கருத்து உள்ளது. எனவே, சிறுபான்மையினரைக் குறிவைத்து அதிமுக காய்களை நகர்த்தும் அதே சமயம், ஹிந்துத்துவ வாக்குகள் பாஜகவை நோக்கிச் செல்லும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த நகர்வுகளுக்கு மத்தியில் தன்னை சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவராக அடையாளப்படுத்திக் கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அந்த வாக்குகள் தனக்கு ஓரளவுக்கு கிடைக்கலாம் என்று நம்புகிறார்.

வரும் மக்களவைத் தேர்தலில் தமிழக அரசியல் களம் பலமுனைப் போட்டியை நோக்கி நகரும் நிலையில், 13 சதவீத சிறுபான்மை வாக்குகள் இந்த முறையும் முக்கியப் பங்கு வகிக்கக் கூடும் என்கின்றனர் அரசியல் 
நோக்கர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com