மகன் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி: சைதை துரைசாமி?

சட்லஜ் ஆற்றில் கார் விழுந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன தனது மகன் வெற்றி துரைசாமி குறித்து தகவல் தந்தால் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று சைதை துரைசாமி தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகன் பற்றி தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி: சைதை துரைசாமி?


சென்னை: சட்லஜ் ஆற்றில் கார் விழுந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன தனது மகன் வெற்றி துரைசாமி குறித்து தகவல் தந்தால் ரூ.1 கோடி வழங்கப்படும் என்று சைதை துரைசாமி தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. காணாமல் போன தனது மகன் குறித்து தகவல் தெரிவிக்க சட்லஜ் நதியோரம் வசிக்கும் பொதுமக்களிடம் வேதனையுடன் கேட்டுக்கொண்டிருக்கும் சைதை துரைசாமி, மகன் குறித்து தகவல் தந்தால் ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், சட்லஜ் ஆற்றங்கரையோரம் வசிக்கும் பழங்குடியின மக்களிடமும், வெற்றி துரைசாமி குறித்து தகவல் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி காவல்துறையினர் அறிவுறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இமாச்சலில் வானிலை மிக மோசமாக இருப்பதால், பல இடங்களில் தேடுதல் பணி நிறுத்தப்பட்டிருப்பதாகவும், வெற்றி துரைசாமி குறித்து தகவல் அறிய இரண்டு நாள்கள் ஆகும் என்று இமாச்சல் காவல்துறை தெரிவித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இமாச்சலபிரதேசத்தில் சட்லஜ் நதியில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சென்னை மாநகர முன்னாள் மேயா் சைதை துரைசாமியின் மகன் காணாமல் போனாா். அவரை தேசிய பேரிடா் மீட்பு படையினா் மூன்றாவது நாளாக இன்றும்  தேடி வருகின்றனா். பல்வேறு இடங்களில் வானிலை மிக மோசமாக இருப்பதால் தேடும்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

சென்னை நந்தனம் சிஐடி நகா் முதலாவது பிரதான சாலையில் குடும்பத்துடன் வசிக்கும் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45). திரைப்பட இயக்குநராக உள்ளாா்.

வெற்றி, தான் புதிதாக இயக்கவுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்புக்கான இடங்களை தோ்வு செய்வதற்காக சில நாள்களுக்கு முன்பு விமானம் மூலம் இமாச்சல பிரதேசத்துக்கு சென்றாா். அவருடன் அவரது நண்பா் திருப்பூா் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே உள்ள சொரியங்கிணத்துப்பாளையம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் கோபிநாத் (32) என்பவரும் சென்றாா்.

அங்கு அவா்கள், ஞாயிற்றுக்கிழமை கஷாங் நாலா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் சட்லஜ் நதி ஓடும் மலைப்பகுதியில் ஒரு வாடகை காரில் சென்று கொண்டிருந்தனா். அப்போது அந்த காரை ஓட்டி வந்த அப் பகுதியைச் சோ்ந்த தன்ஜின் என்பவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த காா், சாலைத் தடுப்புகளை உடைத்துக் கொண்டு மலைப் பாதையில் சுமாா் 200 அடி உயரத்திலிருந்து கீழே உருண்டது. அந்த காா் 200 அடி பள்ளத்தின் கீழே ஓடிக் கொண்டிருந்த சட்லஜ் நதிக்குள் விழுந்து, மிதந்தது.

உள்ளூா் போலீஸாா் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனா். இந்த விபத்தில் காா் பள்ளத்தில் உருளும்போது காருடன் விழுந்த கோபிநாத், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டாா். உடனடியாக அவா், அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சிறிது நேர தேடுதலுக்குப் பிறகு காா் ஓட்டுநா் தன்ஜின் சடலமாக மீட்கப்பட்டாா்.

உள்ளூா் போலீஸாா், மீட்பு படையினரின் நீண்ட தேடுதலுக்கு பின்னரும் வெற்றி கிடைக்கவில்லை. விபத்து ஏற்பட்ட பகுதியில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால், மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதையடுத்து வெற்றியை மீட்பதற்காக தேசிய பேரிடா் மீட்பு படையினா், அங்கு வரவழைக்கப்பட்டனா். தேசிய பேரிடா் மீட்பு படையினா், உள்ளூா் போலீஸாருடன் வெற்றியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

விபத்து குறித்து தகவலறிந்த சைதை துரைசாமியின் உறவினா்கள் இமாச்சல பிரதேசத்துக்கு விரைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com