இயன்முறை மருத்துவ நிலையங்கள்: தொடரும் இழுபறி!

தமிழகத்தில் இயன்முறை மருத்துவ நிலையங்களுக்கு பதிவுச் சான்றிதழ் வழங்குவதில் இழுபறி நிலை நீடிக்கிறது. 
இயன்முறை மருத்துவ நிலையங்கள்: தொடரும் இழுபறி!

தமிழகத்தில் இயன்முறை மருத்துவ நிலையங்களுக்கு பதிவுச் சான்றிதழ் வழங்குவதில் இழுபறி நிலை நீடிக்கிறது. 
இந்திய அளவில் இயன்முறை மருத்துவர்கள் அதிகமுள்ள மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. உடல் இயக்கக் கூறியலை அடிப்படையாகக் கொண்ட இயன்முறை சிகிச்சையானது (ஃபிசியோதெரப்பி) பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவ, பொருளாதார ரீதியாக பலன் அளிக்கிறது. 
நீண்ட நாள் வலி, உடல் இயக்கக் குறைபாடுகள் போன்ற பிரச்னைகளுக்கு மருந்து, மாத்திரைகளைக் கடந்து இயன்முறை மருத்துவம் போன்ற மருந்தில்லா மருத்துவத்தை நோக்கி வருவோரின் எண்ணிக்கை தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. மூளை, நரம்பு மண்டல பாதிப்புகளுக்கும் இயன்முறை மருத்துவ சிகிச்சை பெறுவது அதிகரித்துள்ளது. 
தசை, எலும்பு, மூட்டு, இணைப்பு வலிகள் உள்ளிட்டவை தொடர்பான 157 வகையான குறைபாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், உடல் இயக்க சிக்கல்களிலிருந்து விரைந்து மீளவும், மீண்டும் பாதிக்கப்படாமல் இயங்கவும் இயன்முறை மருத்துவம் இன்றியமையாத ஒன்றாகும். 
மற்ற மாநிலங்களில் இல்லாத விதிகள்: தில்லி, குஜராத், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்களில் ஃபிசியோதெரப்பி மாநில கவுன்சில் உள்ளது. சுமார் 30,000 இயன்முறை மருத்துவர்களைக் கொண்டுள்ள தமிழகத்தில் ஃபிசியோதெரப்பி, ஆய்வக தொழில்நுட்பம் உள்ளிட்ட 10 துறைகளை உள்ளடக்கிய துணை மருத்துவக் கவுன்சிலை தொடங்குவதற்கான அரசாணையை கடந்த டிசம்பர் 15}ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்டது.
வெளிநாடுகளுக்குச் செல்லும் இயன்முறை மருத்துவர்களுக்கு கவுன்சில் பதிவு என்பது நுழைவு அனுமதியாகக் கருதப்படுகிறது. கர்நாடகம், ஆந்திரம் போன்ற மாநிலங்களில் மருத்துவத் துறை வாரியம் செயல்பட்டு வருவதால் அவற்றில் இயன்முறை மருத்துவர்கள் தங்களது படிப்பைப் பதிவு செய்து, வெளிநாடுகளில் வேலைவாய்ப்பை எளிதில் பெற்றுச் செல்கின்றனர். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தமிழகத்தில் துணை மருத்துவ கவுன்சில் அமைப்பதாக அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 
இது குறித்து இந்திய இயன்முறை மருத்துவர்கள் அமைப்பின் தமிழ்நாடு கிளைத் தலைவர் வெ.கிருஷ்ணகுமார் கூறியதாவது: இயன்முறை மருத்துவம் தொடர்பான விதிகளை மருத்துவர்களுடன் கலந்தாலோசிக்காமல் தமிழக அரசு தற்போது அமல்படுத்தியுள்ளது. ஆனால், மற்ற மாநிலங்களில் இல்லாத சில விதிகளை இங்கு அறிமுகம் செய்துள்ளனர். 
4.5 ஆண்டுகள் படித்து பட்டம் பெற்ற இயன்முறை மருத்துவர்களுக்கு தொழில்நுட்புநர் (டெக்னீஷியன்) என்ற அடிப்படையில் பதிவுச் சான்றிதழ் வழங்க இருப்பதாக விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கவுன்சில் உறுப்பினராக இயன்முறை மருத்துவர்கள் பதிவு செய்ய அலோபதி மருத்துவரிடம் நற்சான்றிதழ் பெற்றுவர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் உடல் நலன் சார்ந்த விவகாரத்தில் முறையான விதிமுறைகள் அவசியம் என்பதை தமிழக அரசு சிந்திக்க வேண்டும்.
சான்றிதழ் பெற முடியவில்லை: 
தமிழகத்தில் மருத்துவ நிறுவனங்கள் ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ் இயன்முறை சிகிச்சை மருத்துவ நிலையங்கள் (ஃபிசியோதெரப்பி கிளீனிக்ஸ்) பதிவு செய்யப்பட்டுள்ளன; இதுவரை பதிவுச் சான்று வழங்கப்படாமல் தொடர்ந்து அரசு புறக்கணிக்கிறது. அரசு நிர்ணயம் செய்த பதிவுக் கட்டணம் ரூ.5,000 செலுத்தியும் சான்றிதழ் பெற முடியவில்லை. 
சில மாவட்டங்களில் சான்றிதழ் வழங்க, இயன்முறை சிகிச்சை மருத்துவ நிலையத்தை அலோபதி மருத்துவர் நடத்துவதுபோல அவரிடமிருந்து ஒப்புதல் சான்றிதழ் வாங்கி வருமாறு கட்டாயப்படுத்துகின்றனர். இது இயன்முறை மருத்துவர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இயன்முறை மருத்துவப் படிப்பை ஓராண்டு, இரண்டாண்டு என குறுகிய காலப் படிப்புகளாக இந்திய, தமிழக திறன் மேம்பாட்டுக் கழகங்கள் நடத்தி வருவதைக் கைவிட வேண்டும் என்றார். 
இது குறித்து இயன்முறை மருத்துவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் 236 இயன்முறை மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். இதுதவிர மக்களை தேடி மருத்துவம், தேசிய சுகாதார இயக்ககத்தின்கீழ் 568 இயன்முறை மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். மற்ற மாநிலங்களில் இயன்முறை மருத்துவர்களுக்கு ரூ.30,000 வரை தொகுப்பூதியம் வழங்கப்படும் நிலையில், தமிழகத்தில் ரு.12,000 மட்டுமே வழங்கப்படுகிறது. 
எனவே, ஊதிய முரண்பாடுகள் களையப்பட வேண்டும். நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்களை அதிகரிக்க வேண்டும். 
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள நகர்ப்புற நல்வாழ்வு மையங்களில் இயன்முறை மருத்துவர்களை பணியில் அமர்த்த வேண்டும். மாற்றுத் திறனாளிகள் நலத் துறையிலும் இயன்முறை மருத்துவர்களை தமிழக அரசு நியமிக்க வேண்டும். ஒவ்வொரு வட்ட அளவிலும் நவீன கருவிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த இயன்முறை மருத்துவ மையங்களை தமிழக அரசு நிறுவ வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com