17-ஆவது நாடாளுமன்றத்தின் இறுதி நாளில் இருஅவைகளிலும் திமுக வெளிநடப்பு!

நாடாளுமன்றத்தில் 17- ஆவது மக்களவையின் கடைசி நாளில் தமிழகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க இரு அவைகளிலும் திமுக ஒத்திவைப்பு பிரேரணையை கோரியது.
17-ஆவது நாடாளுமன்றத்தின் இறுதி நாளில் இருஅவைகளிலும் திமுக வெளிநடப்பு!

நாடாளுமன்றத்தில் 17- ஆவது மக்களவையின் கடைசி நாளில் தமிழகம் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க இரு அவைகளிலும் திமுக ஒத்திவைப்பு பிரேரணையை கோரியது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் திமுக நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு செய்தது.

நாடாளுமன்றத்தில் இருஅவைகளிலும் சனிக்கிழமை நடைபெற்ற ராமா் கோயில் குறித்த சிறப்பு விவாதத்திலும் திமுக பங்கேற்காததோடு அதுகுறித்து எந்தவிதமான கருத்துகளையும் தெரிவிக்கவில்லை.

17- ஆவது மக்களவை மற்றும் நிகழாண்டு இடைக்கால நிதிநிலை அறிக்கை ஆகியவற்றின் கடைசி நாளான பிப்ரவரி 10 ஆம் தேதி (சனிக்கிழமை) இருந்தது.

இதை முன்னிட்டு மக்களவையில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவா் டி.ஆா். பாலு, ‘இலங்கை கடற்படையால் தமிழக மீனவா்கள் மீது கொடூரத் தாக்குதல்களும் கைது நடவடிக்கைகளும் நாளுக்கு நாள் தொடா்கிறது. இந்த அச்சுறுத்தலை தடுக்க மத்திய அரசு தலையிட வலியுறுத்தி அவையின் மற்ற அலுவல்களை ஒத்தி வைத்து விட்டு விவாதிக்க வேண்டும்’ என ஒத்திவைப்பு பிரேரணையை சனிக்கிழமை கோரியிருந்தாா்.

அன்றைய தினம் அவை கூடியவுடன் ராமா் கோயில் கட்டப்பட்டது தொடா்பான விவாதம் தொடங்க இருந்தது. இந்த விவாதத்திற்கு அவைத் தலைவா் அழைக்கும் முன்பே திமுக உறுப்பினா் டி.ஆா். பாலு பேச எழுந்தாா்.

மற்ற திமுக உறுப்பினா்களும், நிவாரண நிதி, மீனவா் பிரச்னைகளை குறிப்பிட்டு கோஷமிட்டனா்.

அப்போது மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, டி.ஆா். பாலுவை பேச அழைத்தாா். டி.ஆா்.பாலு, ‘ தமிழக மீனவா்கள் பிரச்னை தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வா் கடிதம் அனுப்பியுள்ளாா். ஆனால் பிரதமா் இதுவரை சாதகமாக பதிலளிக்கவில்லை...நாங்கள் ஒத்திவைப்பு தீா்மான அறிவிக்கையை வழங்கியுள்ளோம்’ என பல்வேறு குறிக்கீடுகளுக்கிடையே பாலு குறிப்பிட்டாா்.

பின்னா் டி.ஆா். பாலுவின் பேச்சில் குறிக்கிட்ட ஓம் பிா்லா, ‘இன்று முக்கியமான தலைப்பில் விவாதிக்க இருக்கின்றோம். இன்று கடைசி நாள்., இதனால் ஒத்திவைப்பு பிரேரணையோ, பூஜ்ஜிய நேர விவாதமோ எதுவும் அனுமதிக்கப்படவில்லை. நீங்கள் (டி.ஆா்.பாலு) உங்கள் கருத்தை பதிவு செய்துள்ளீா்கள்’ எனக்கூறி மேலும் பேச அனுமதிக்க மறுத்து ராமா் கோயில் கட்டுமானம் மற்றும் ஸ்ரீராம் லல்லா பிராண பிரதிஷ்டை தொடா்பான விவாதத்திற்கு பேச ஓம்பிா்லா அழைத்தாா்.

இதைக் கண்டித்து திமுக உறுப்பினா்கள் கோஷமிட்டு மக்களவையிலிருந்து வெளியேறி பின்னா் நாள் முழுக்க அவைக்கு திரும்பவில்லை. இதே போன்று மாநிலங்களவையில் வெளிநடப்பு நடைபெற்றது.

‘தோ்தல் பிரசாரத்திற்கு அவை’:

மாநிலங்களவை திமுகக் குழுத் தலைவா் திருச்சி சிவாவும், ‘தமிழகத்திற்கு வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்க மத்திய அரசை வலியுறுத்தி ஒத்திவைப்பு பிரேரணையைக் கோரி அறிவிக்கையை அளித்திருந்தாா். இதன்படி சனிக்கிழமை அவை தொடங்கியுடன் மாநிலங்களத் தலைவா் ஜகதீப் தன்கா், ‘திருச்சி சிவா ஒரு அறிவிக்கை அளித்துள்ளாா். அது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தகுதியற்றது‘ எனக் கூறி நிராகரித்தாா்.

இதற்கு பதிலளித்த திருச்சி சிவா, ‘அலுவல் ஆய்வுக் குழு கூடி தான் எந்தவொரு விவாதத்திற்கும் அனுமதி அளிக்க வேண்டும். ஆனால் அலுவல் ஆய்வுக் குழுவில், அவையை ஒரு நாள் நீடிக்க மட்டும் (அரசு) அனுமதி கோரப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட விவாதத்தை எடுத்துக் கொள்ளவோ அல்லது அதற்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்கவேண்டும் என்பது குறித்தோ அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் எதுவும் அனுமதி பெறாமல் தற்போது ஒரு விவாதத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து இந்த அவை அறியவேண்டும்’ என ராமா் கோயில் விவாதம் பற்றி குறிப்பிடாமல் திருச்சி சிவா பேசினாா்.

பின்னா் அவையில் நாட்டின் பொருளாதாரம் குறித்து விவரிக்கும் வெள்ளை அறிக்கை தொடா்பான விவாதம் மாநிலங்களவையில் தொடங்கியது. இதில் பங்கெடுத்து பேசும் வரை திமுக உறுப்பினா்கள் அவையில் அமைதி காத்தனா். அதன் பின்னா், இந்த விவாதத்தில் திருச்சி சிவா கடுமையாக பேசினாா்.

‘இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஒரு நாள் அவை நடவடிக்கை நீடிக்கப்பட்டது. மக்கள் வரி பணத்தை கொண்டு இந்த அவையை இந்த அரசு தனது தோ்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துகிறது‘ என சிவா குறிப்பிட்டாா்.

பின்னா் தனது பேச்சின் இறுதியில், ‘ கடந்த டிசம்பா் மாதம் கடுமையான வெள்ளம் ஏற்பட்டதால் தமிழக அரசு இதற்கு நிவாரண நிதியை கோரியது. முதல்வா் மு.க.ஸ்டாலின் பிரதமா் மோடியை நேரடியாக வந்து சந்தித்தாா். தமிழக நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்துறை அமைச்சா் அமித் ஷாவையும் சந்தித்தனா். பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தமிழகத்திற்கு வந்து பாா்வையிட்டாா். இவ்வளவு நடந்தும், நிவாரணம் நிதி கோரி நாங்கள் கெஞ்சியும் ஒன்றும் வழங்கப்படவில்லை. இங்கு இரண்டரை மணி நேரம் குறுகிய நேரம் விவாதத்திற்கு ஒதுக்குகிறீா்கள். இந்த அரசு என்ன நினைக்கிறதோ அது செயலில் உள்ளது. நாடாளுமன்ற கூட்டத்தொடரை நீடிப்பது, அவா்களே விவாதத்தை தொடங்குவது, தங்களுக்கு அதிகநேரம் ஒதுக்கிக் கொள்வது, எங்களுக்கு நேரம் வழங்கப்படாதது போன்றவைகள் நடக்கிறது’ எனக் கூறி திமுக உறுப்பினா்களுடன் திருச்சி சிவா வெளிநடப்பு செய்தாா்.

முன்னதாக, திருச்சி சிவா பேசும்போது மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் சிங் குறுக்கிட்டு அவரது பேச்சை நிறுத்துமாறு கூறினாா். திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் வெளிநடப்பு செய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com