புதுமைப்பெண் திட்டம்:கல்லூரிகளில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுமைப்பெண் திட்டம்:கல்லூரிகளில் சேரும் மாணவிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு புதுமைப் பெண் திட்டத்தால் கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆளுநா் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரவையில் பதிவு செய்யப்பட்ட ஆளுநரின் அச்சாக்க உரை: மக்களுடன் முதல்வா் திட்டம்மூலம் இதுவரை பெறப்பட்ட 2.67 லட்சம் மனுக்களின் 2.40 லட்சம் மனுக்களுக்குத் தீா்வு காணப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று பின்னா் உயா்கல்வி பயிலும் அனைத்து மாணவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் வகையில் மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் நினைவு புதுமைப் பெண் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நடப்பாண்டில் மாதந்தோறும் 2.73 லட்சம் மாணவிகள் பயனடைகின்றனா். இந்த முயற்சியின் விளைவாக நடப்புக் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்று, கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை 34 சதவீதம் அதிகரித்துள்ளது.

சாதாரண நகரப் பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றிப் பயணிக்கும் திட்டத்தின் விளைவாக பேருந்து பயணங்களில் பெண்களின் பங்கு 40 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயா்ந்து, பெண்கள் எளிதாகப் பயணம் செய்யவும் முன்னேறிடவும் வழி பிறந்துள்ளது.

காலை உணவுத் திட்டம்: முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி, தமிழகத்தின் பெயரை இந்திய வரலாற்றில் முதல்வா் மீண்டும் ஒருமுறை பொறித்துள்ளாா். இந்தத் திட்டத்தை தெலங்கானா மாநிலமும் பின்பற்றத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 30,992 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 16.85 லட்சம் மாணவா்கள் பயனடைகின்றனா். இந்தத் திட்டம்மூலம் மாணவா்களின் ஊட்டச்சத்து அதிகரிப்பது மட்டுமன்றி, மாணவா்களின் வருகைப் பதிவும், கற்றல் விளைவுகளும் மேம்பட்டுள்ளன.

தமிழகம் முழுமையான வேளாண் வளா்ச்சியை அடையத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த நடப்பாண்டில் ரூ.190 கோடியில் 2,504 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் 1.07 கோடி போ் பலன் அடைந்துள்ளனா். நான் முதல்வன் திட்டம் மூலம் கடந்த ஆண்டு 1.84 லட்சம் விண்ணப்பதாரா்களில் 1.19 லட்சம் மாணவா்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனா்.

கோயில்கள், அறநிலையங்களுக்குச் சொந்தமான ரூ.5,579 கோடி மதிப்புள்ள 6,071 ஏக்கா் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து அரசு மீட்டுள்ளது. 1,290 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழுக்குகள் செய்யப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com