தமிழக மீனவர்கள் கைது: பிரதமர் தலையிட முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மீனவர் விடுதலைக்கு முதல்வர் கோரிக்கை: மத்திய அரசிடம் உறுதியாக வலியுறுத்தல்
தில்லியில் பிரதமர் மோடியை வியாழக்கிழமை சந்தித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.
தில்லியில் பிரதமர் மோடியை வியாழக்கிழமை சந்தித்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தமிழக மீனவர்கள் விடுவிக்கப்படுவதை பிரதமர் மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி செய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமூக வலைத் தளப்பதிவில், தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தொடர்ந்து கைது நடவடிக்கைக்கு உள்ளாவது மிகுந்த கவலையளிக்கிறது. கடந்த இரண்டு மாதங்களில், இத்தகைய கைது நடவடிக்கைகள் மிகவும் அதிகரித்திருக்கின்றன; இக்காலத்தில் 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதைவிட அதிர்ச்சியளிப்பது என்னவென்றால், மூன்று மீனவர்களை மீண்டும் மீண்டும் குற்றம்புரிபவர் (habitual offender) பட்டியலில் அநியாயமாகச் சேர்த்து விடுவிக்காமல் தொடர்ந்து சிறையில் அடைத்திருப்பதுதான்.

இது நமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பது மட்டுமல்லாமல், அவர்களது படகுகளை நாட்டுடைமையாக்கும் இலங்கை அரசின் செயல் சிறுகச் சிறுகச் சேர்த்த சேமிப்புகளையும் அழிக்கிறது.

இந்தியப் பிரதமரும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் உடனடியாக இதில் தலையிட்டு நமது மீனவர்கள் விடுதலை செய்யப்படுவதையும் அவர்களது படகுகள் விடுவிக்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும் எனத் தமிழ்நாட்டு மக்கள் அனைவரின் சார்பாகவும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

இதனை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி, நமது மீனவர்களின் நலனைக் காக்கும் வகையில் உறுதியான நடவடிக்கையை எடுத்திட வேண்டும். ஏனென்றால், அவர்கள் தமிழர்கள் மட்டுமல்ல, பெருமைமிகு இந்தியர்களும் கூட! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com