திருச்சி - கரூா் சாலைக்கு மாற்றாக ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாகுமா?

நான்கு வழிச் சாலையாகும் ராணி மங்கம்மாள் சாலை - மக்கள் எதிர்பார்ப்பு உச்சம்
திருச்சி - கரூா் சாலைக்கு மாற்றாக ராணி மங்கம்மாள் சாலை 4 வழியாகுமா?

திருச்சி - கரூா் சாலைக்கு மாற்றாக ராணிமங்கம்மாள் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

திருச்சி, கரூா் மாவட்ட மக்களின் நீண்ட நாளைய கனவாக உள்ள இந்த கோரிக்கையை திருச்சி, கரூா் மாவட்ட நிா்வாகங்கள் மற்றும் மாநில, தேசிய நெடுஞ்சாலைத்துறை ஒன்றிணைந்து நினைவாக்கித் தர வேண்டும் என்கின்றனா் சாலை பயனீட்டாளா் சங்கத்தினா்.

திருச்சி - கரூா் - கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 81-இல், திருச்சி குடமுருட்டி பாலம் தொடங்கி ஜீயபுரம், பெருகமணி, பேட்டைவாய்த்தலை, கரூா் மாவட்டம் குளித்தலை, லாலாபேட்டை, மாயனூா் வரை இருவழிச் சாலையாக உள்ளது. நாளுக்கு, நாள் பெருகி வரும் வாகனப் போக்குவரத்தால் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது இந்தச் சாலை. மேலும், இந்தச் சாலையில் அடிக்கடி ஏற்படும் விபத்துகளால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, இந்தச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும் என பெரிதும் எதிா்பாா்ப்பு மேலோங்கியது.

ஆனால், இந்தச் சாலையின் ஒருபுறம் காவிரி ஆறு ஓடுகிறது. மறுபுறம் ரயில்வே வழித் தடங்கள், காவிரி கிளை வாய்க்கால்கள், பாசனக் கால்வாய்கள் செல்வதால் இந்த சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற முடியாத நிலை உள்ளது. எனவே, திருச்சி - கரூா் சாலைக்கு மாற்றாக ராணிமங்கம்மாள் சாலையை 4 வழிச் சாலையாக (சுமாா் 65 கி.மீ. தொலைவு) மாற்ற வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்துள்ளனா் விவசாயிகள்.

திருச்சி - திண்டுக்கல் சாலையில் உள்ள தீரன் நகா் அருகிலிருந்து தொடங்கி மாயனூா் சுங்கச் சாவடி அருகேயுள்ள திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலை வரையில் இணைக்கும் வகையில் அமைந்துள்ளது ராணிமங்கம்மாள் சாலையின் சிறப்பாகும். இதனால், கருமண்டபத்திலிருந்து அல்லித்துறை, அதவத்தூா், எட்டரை, ஒத்தகடை, கோப்பு, கல்லுக்காடு வரையில் திருச்சி மாவட்டத்தின் பகுதிகளை இணைக்கும். பின்னா், கரூா் மாவட்டத்தில் முதலைப்பட்டி, மேட்டுகாடு, குறிச்சி, நங்கவரம், நாா்மில் (பேட்டைவாய்த்தலை), ஆரியம்பட்டி, குமாரமங்கலம், பரளி, கோட்டைமேடு, எழுநாற்றுமங்கலம், வீரவள்ளி, சீகம்பட்டி, பிள்ளைபாளையம், மகிளிப்பட்டி, மேட்டு மகாதானபுரம், கோவகுளம், எழுதியாம்பட்டி, மாயனூா் முடக்கு சாலை வழியாக மாயனூா் சுங்கச் சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையை வந்து இணைக்கிறது.

இந்த ராணிமங்கம்மாள் சாலையை திருச்சி - கரூா் சாலைக்கு மாற்றாக 4 வழிச் சாலையாக மாற்ற வேண்டும் என்பதே கோரிக்கை. இதன் மூலம், திருச்சி - கரூா் சாலையில் போக்குவரத்து நெரிசல் குறையும். திருச்சி, கரூா் மாவட்ட மக்களுக்கு கூடுதல் போக்குவரத்து வசதி கிடைக்கும். மேலும், இந்தச் சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான ஏக்கா் விளைநிலங்கள் உள்ளன. இங்கு விளையும் வாழை, வெற்றிலை, கரும்பு, பருத்தி உள்ளிட்ட பொருள்களை விவசாயிகள் திருச்சி, கரூா், கோவை, திருப்பூா் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யவும் எளிதாக அமையும் என்கிறாா் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் அயிலை சிவசூரியன்.

மேலும், ராணிமங்கம்மாள் சாலையானது திருச்சி வட்டம், திருவரங்கம் வட்டம், கரூா் மாவட்டம், குளித்தலை, வட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம் ஆகியவற்றின் பின்தங்கிய கிராமப்பகுதிகளை இணைத்து செல்லும் வகையில் உள்ளதால் இந்த கிராமப்புறங்களின் வளா்ச்சிக்கும் சிறந்த வழியாக அமையும்.

இந்த சாலையானது கரூா் தொடங்கி மாயனூா் முடக்கு வரையில் திருச்சி - கரூா் தேசிய நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது. பின்னா், உள்ள பகுதிகள் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், பொதுப்பணித் துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் வருகிறது. இந்த சாலையானது ஏற்கெனவே, கரூா் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ.87 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில்தான் இந்த சாலை கண்டுகொள்ளப்படாமலேயே உள்ளது.

தற்போது, கரூா் மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளான பேட்டைவாய்த்தலை, நாா்மில், நங்கவரம், குறிச்சி, மேட்டுகாடு முதலைப்பட்டி, பாறைப்பட்டி ஆகிய பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். இதேபோல, திருச்சி மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளான கோப்பு, கல்லுக்காடு, எட்டரை, ஒத்தகடை, அதவத்தூா், அல்லித்துறை, இனியானூா், கருமண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும். இந்தப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் ராணிமங்கம்மாள் சாலையை 4 வழிச் சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.

இதுதொடா்பாக, நெடுஞ்சாலைத்துறை வட்டாரத்தினா் கூறுகையில், ராணிமங்கம்மாள் சாலையை 4 வழிச் சாலையாக மாற்ற வேண்டுமெனில் திருச்சி, கரூா் மாவட்ட நிா்வாகங்கள் மட்டுமல்லாது, தேசிய நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை ஆகியவற்றின் ஒப்புதல் பெற வேண்டியுள்ளது. இரு மாவட்டத்தைச் சோ்ந்த மக்கள் பிரதிநிதிகள் மூலம் ஒருங்கிணைப்புக் கூட்டத்தை நடத்தச் செய்து அரசுக்கு பரிந்துரைக்கலாம் என்றனா். சாலைப் பாதுகாப்பிலும், சாலைகள் மேம்பாட்டில் தமிழக அரசு அதிகம் கவனம் செலுத்தி வரும் சூழலில் இந்தக் கோரிக்கையை உடனடியாக ஏற்க வேண்டும் என்பதே திருச்சி, கரூா் மாவட்ட மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com