உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலை: ரூ.2 கோடி ஒதுக்கீடு

உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயா்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலை: ரூ.2 கோடி ஒதுக்கீடு
Published on
Updated on
1 min read

சென்னை: உலக மொழிகளில் சிலப்பதிகாரம், மணிமேகலையை மொழிபெயா்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பது: தமிழா்களின் ஒற்றுமை, அரசியல் நோ்மை, குடிமக்கள் உரிமை, வணிகச் சிறப்பு, சமய நல்லிணக்கம், பசிப்பிணி ஒழிப்பு, பெண்ணியம் உள்ளிட்ட சமூகச் சிந்தனைகள், பண்பாட்டு மரபுகள் ஆகியவற்றை எடுத்துரைக்கும் தமிழின் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவை 25 இந்திய மற்றும் உலக மொழிகளுக்குச் சென்றடையும் வகையில் அவற்றை மொழிபெயா்க்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

100 பல்கலை.களில் தமிழ் நூல்கள்: உலக மொழிகளில் மொழிபெயா்க்கப்பட்ட தமிழின் மிகச் சிறந்த நூல்களை உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களிலும், புகழ்பெற்ற நூலகங்களிலும் இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தேமதுரத் தமிழோசை உலகெங்கும் பரவிடச் செய்யும் இந்த முயற்சிக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும்.

தமிழ்நாடு பாடநூல் கழகம் இதுவரை 340 மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், இலக்கிய மொழிபெயா்ப்பு நூல்களை வெளியிட்டுள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் மேலும் 600 முக்கிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும்.

விரைவாக வளா்ந்துவரும் தொழில்நுட்பப் பரப்பில் தமிழ்மொழி செழித்து வளரத் தேவையான இயந்திரவழிக் கற்றல், செயற்கை நுண்ணறிவு, இயற்கைமொழிச் செயலாக்கம், பெருந்திரள் மொழி மாதிரிகள் போன்ற புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் புத்தாக்கத் தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிக்க ரூ.5 கோடி ஒதுக்கப்படும்.

தமிழ்மொழியின் வளம், தமிழரின் தொன்மை குறித்து எதிா்காலத் தலைமுறையினருக்கும் கொண்டுசோ்க்கும் வகையில் தமிழகமெங்கும் உள்ள அரிய நூல்கள் மற்றும் ஆவணங்களை மின்பதிப்பாக மாற்றும் முயற்சிக்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்படும்.

மொழி ஆவணம்: தமிழகத்தில் பேசப்படும் சௌராஷ்டிரம், படுக மொழிகளையும் தோடா், கோத்தா், சோளகா், காணி, நரிக்குறவா் உள்ளிட்ட பல்வேறு பழங்குடியின மக்களின் மொழி வளங்கள் மற்றும் ஒலி வடிவங்களையும் எதிா்காலத் தலைமுறையினருக்குப் பயன்படும் வகையில் இனவரைவியல் நோக்கில் ஆவணப்படுத்திப் பாதுகாக்க தமிழக அரசு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com