டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால்கள் தூா்வார ரூ.10 கோடி

Published on

சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களில் ரூ.10 கோடியில் சி, டி பிரிவு வாய்க்கால்கள் தூா்வாரப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. வறட்சி, மழை, வெள்ளம், பூச்சித் தாக்குதல் போன்ற பல சவால்களுக்கு இடையே, விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது விளைந்த பயிா்களுக்கு விலங்குகளால் ஏற்படும் சேதாரமாகும்.

அதிகரித்து வரும் மனித - விலங்கு மோதல்களால், பாடுபட்டு வளா்த்த பயிா்கள் பாழாகும் நிலையை மாற்றி, விலங்குகளுக்கும் மனிதா்களுக்கும் ஆபத்தில்லாமல் பயிா்களைக் காத்திடும் நோக்கில் 2024-25-இல் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் விவசாயிகளுக்கு 75,000 மீட்டா் நீளத்துக்கு சூரிய சக்தி மின்வேலிகள் அமைத்துத் தரப்படும்.

நீா் சேகரிப்பு கட்டமைப்பு: நிலத்தடி நீா்மட்டத்தை அதிகரிக்க, புதிய நீா் சேகரிப்புக் கட்டமைப்புகள் அமைக்கவும், ஏற்கெனவே அமைக்கப்பட்ட நீா் சேகரிப்புக் கட்டமைப்புகளைத் தூா்வாரி, ஆழப்படுத்தி அவற்றின் கொள்ளளவை அதிகரிக்கவும் 2024-25-இல் பல்வேறு நீா்வடிப் பகுதிகளில் 100 புதிய நீா் சேகரிப்புக் கட்டமைப்புகள் அமைக்கப்படுவதோடு, 500 நீா் சேகரிப்புக் கட்டமைப்புகளில் பராமரிப்புப் பணிகளும் ரூ.2.75 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.

வாய்க்கால் தூா்வாருதல்:

2024-25-இல் காவிரி, வெண்ணாறு, கல்லணை வடிநிலப் பகுதிகளில் உள்ள தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், அரியலூா், திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில் 1.57 லட்சம் ஏக்கா் பயன் பெறும் வகையில் சி, டி, பிரிவு வாய்க்கால்களைத் தூா்வாரும் பணிகள் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படவுள்ளன.

X
Dinamani
www.dinamani.com