விரைவில்... நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம்: பொதுமக்களின் கோரிக்கை வெற்றி!

நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை
நீடாமங்கலம்
நீடாமங்கலம்

நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

நீடாமங்கலத்தில் அகலப்பாதை போடப்பட்டபின்பு ரயில்நிலையம் ஏற்கனவே இருந்த இடத்திற்கு தெற்குபுறமாக எதிர்திசையில் புதியதாக கட்டப்பட்டது. மிகச்சிறிய பழைய நடைமேடை என்பது மாறி நிலையத்தின் இருபுறமும் மூன்று நடைமேடைகளாக அமைக்கப்பட்டது. அதாவது கிழக்கு,மேற்காக மூன்று நடைமேடைகள் பெரிய அளவில் உள்ளன. இதற்கு இடையில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.

இந்த தேசிய நெடுஞ்சாலை வழியாக பல்வேறு மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் நாகூர்,வேளாங்கண்ணி,காரைக்கால் வரை செல்லக்கூடிய பேருந்துகள், வேன்கள், கார்கள், லாரிகள் மற்றும் இதர கனரக வாகனங்கள் இருவழிகளிலும் நீடாமங்கலம் ரயில்வே கேட்டை கடந்து தான் சென்று வருகிறது.

நீடாமங்கலம் ரயில்வேகேட்
நீடாமங்கலம் ரயில்வேகேட்

இதேபோல் பேராவூரணி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, மன்னார்குடி போன்ற ஊர்களில் இருந்து நீடாமங்கலம் வழியாக கும்பகோணம், வேலூர், திருவண்ணாமலை, சென்னை,திருப்பதி போன்ற பல்வேறு ஊர்களுக்கும் பேருந்துகள், கார்கள், வேன்கள், லாரிகள் இதர கனரக வாகனங்கள் இரு மார்க்கத்திலும் நீடாமங்கலம் ரயில் நிலைய கேட்டை கடந்துதான் சென்று வருகின்றன.

பயணிகள் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் நீடாமங்கலத்தை கடந்து செல்லும் போது ரயில்வேகேட் நாள்தோறும் அடிக்கடி மூடப்படுகிறது.

இதனால் நெடுஞ்சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. அதோடு மட்டும் இல்லாமல் பொதுமக்கள் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் அவதிப்படுவது வாடிக்கையாக அமைந்து விட்டது. அவசரகால ஊர்திகளும் செல்லமுடியாமல் தவித்து வருகின்றன. உள்ளுர் மக்களும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல மிகவும் சிரமப்படும் நிலை உள்ளது.

இந்த நிலையில் மாற்றுப்பாதை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து பல்வேறு கட்டங்களாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.

தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ., பி.ராஜமாணிக்கம் ஆகியோர் அப்போதைய மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவிடம் நீடாமங்கலம் பகுதியில் சுற்றுச்சாலை அமைக்க கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் சுற்றுச்சாலை அமைக்க 100 கோடிரூபாயை டி.ஆர்.பாலு ஒதுக்கீடு செய்தார்.

பின்னர் திருச்சி முதல் நாகப்பட்டினம் வரையிலான நான்கு வழிச்சாலைத் திட்டத்துடன் நீடாமங்கலம் பகுதி சேர்க்கப்பட்டதால் சுற்றுச்சாலை திட்டம் கைவிடப்பட்டது.

தற்போது அந்த இருவழிச்சாலை பணிகளும் பெருமளவில் நடந்து முடிந்துள்ளன.

பல்வேறு மாநிலங்களுக்கான ரயில் போக்குவரத்து வழித்தடமாக இருப்பதாலும் சரக்கு ரயில் போக்குவரத்து அதிகரித்து இருப்பதாலும் நாள்தோறும் சுமார் 7 மணி நேரம் கூட ரயில்வே கேட் மூடப்பட்டு வருகிறது.

மேம்பாலம் திட்டம்

இதற்கிடையில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையான நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் திட்டத்திற்காக முதல் கட்டமாக 20 கோடி ரூபாயை அரசின் 110-வது விதியின் கீழ் அறிவித்தார். மண்பரிசோதனை செய்யப்பட்டு, நெடுஞ்சாலைத்துறையால் திட்டவரைபடங்கள் தயாரிக்கப்பட்டு ரயில்வே துறை, நெடுஞ்சாலைத்துறையால் ஆய்வும் நடத்தப்பட்டது.

தொடர்ந்து நீடாமங்கலம் மேம்பாலம் திட்டத்திற்காக 2015-2016 ஆம் நிதியாண்டில் மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்து அனுமதியளித்தது.

நிதி ஒதுக்கீடு தொகையாக 53 கோடியே 92 லட்ச ரூபாயை ரயில்வே துறை தன்பங்கிற்கு செலவிட திட்டமிட்டது.

திட்ட பணிகள் தொடங்காத காரணத்தால் ரயில்வே துறை தனது பங்கிற்கான 53 கோடி ரூபாயை விடுவிக்காமல் இருந்தது.

இதில் தேய்மான நிதியாக 44 கோடியே 95 லட்சம் ரூபாயும், மூலதன நிதியாக 8 கோடியே 97 லட்ச ரூபாயும் செலவிட திட்டமிட்டது.

ஒவ்வொரு ஆண்டும் சிறு,சிறு தொகையாக ஒதுக்கீடு செய்துள்ள நிதி உள்ளது.

ரயில்வே மேம்பாலம் பணிதொடங்கும் பட்சத்தில் இந்த தொகையை ரயில்வே துறை வழங்கும் என கூறப்பட்டது.

சுமார் பத்தாண்டுகள் கிடப்பில் போடப்பட்ட நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் திட்டப்பணிகளை விரைந்து தொடங்கிட மன்னார்குடி எம்.எல்.ஏ டி.ஆர்.பி.ராஜா முயற்சிகள் மேற்கொண்டார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அமைச்சர் எ.வ.வேலு நடவடிக்கை எடுத்து தமிழக அரசு 170 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்து பணிக்கான டெண்டர் விடப்பட்டு தற்போது வரும் 23-ம் தேதி பணிகள் தொடங்க அடிக்கல் நாட்டப்படவுள்ளது.

சுமார் ஐந்தாண்டுகளில் பணிகள் நிறைவடையும் எனவும் கூறப்படுகிறது.

ரயில்வே மேம்பாலம் அமைந்துமுடியும் அதேசமயம் மேம்பாலம் கட்டுமான பணிகள் முடிந்தபின் நீடாமங்கலம் ரெயில்வே கேட் நிரந்தரமாக மூடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பு சுரங்கப்பாதை:

ரயில்வேகேட் மூடப்பட்டால் அருகருகேயுள்ள கிராம மக்கள் எப்படி நகரத்திற்குள் வருவது, ஆற்றங்கரையோரம் உள்ள மயானத்திற்கு இறப்பவர்களின் உடலை எப்படி எடுத்துச்செல்வது, மேம்பாலத்தை சுற்றி வருவது சாத்தியமா என்றெல்லாம் மக்களால் கேள்வி எழுப்பப்படுகிறது.

அதற்கும் ரயில்வேத்துறை ஒரு வசதியை செய்துள்ளது. நீடாமங்கலம் ரயில்வே கேட்டிற்கு கீழ் பகுதியில் நடுத்தர வாகனங்கள் செல்ல ரயில்வே துறை சுரங்கப்பாதை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த பணிகள் எல்லாம் முடிவுற ஐந்தாண்டுகள் ஆகும் என தெரிகிறது.

பணிகள் முடிந்த பின்பு எதிர்கால சந்ததியினருக்கு நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் என்று ஒன்று இருந்ததாகவும், வாகன போக்குவரத்து நெருக்கடி விபரங்கள் குறித்தும் அறிந்தவர்கள் யாராவது சொல்லக் கேட்டுத்தான் தெரியும் என்பதே உண்மையாக இருக்கும்.

பொதுமக்களின் கோரிக்கை வெற்றியடைய மாற்றுப்பாதை திட்டத்திற்கான கருத்துக்களை 35 ஆண்டுகளாக பதிவு செய்த பத்திரிக்கைகளின் பணிகளும், நாகை பாராளுமன்ற உறுப்பினர் நீடாமங்கலம் பகுதியைச்சேர்ந்த எம்.செல்வராஜ் எடுத்த முயற்சிகளும் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஊர்கூடி தேர் இழுத்ததால் பல்வேறு அரசியல்கட்சியினர், தன்னார்வ அமைப்பினர் என அனைவருக்கும் பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com