நிபந்தனைகளை ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் நிறைவேற்றும் என்பதை நம்ப முடியாது: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் 
ஸ்டெர்லைட் ஆலையில் ஜூலை 31 வரை ஆக்ஸிஜன் தயாரிக்க அனுமதி: உச்ச நீதிமன்றம் 

நமது நிருபர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிபுணர் குழு அமைத்து அதன் பரிந்துரைகளின்படி செயல்பட அனுமதித்தாலும், நிபந்தனைகளை ஆலை நிர்வாகம் பூர்த்தி செய்யும் என்பதை நம்ப முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது.

இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பான விசாரணை மீண்டும் வியாழக்கிழமைக்கு (பிப்.22) ஒத்திவைக்கப்பட்டது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் 2020}இல் அளித்த தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆலை நிர்வாகம் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வு முன் புதன்கிழமை நடைபெற்றது.

ஆலை நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான், "ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் சுற்றுச்சூழல் உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளையும் கடைப்பிடிக்கத் தயாராக உள்ளது. ஆனாலும், அரசியல் காரணத்துக்காக அதைத் திறக்க மறுப்பு தெரிவிக்கப்படுகிறது' என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் தமிழக அரசின் ஆட்சேபணைகளை புறந்தள்ளிவிட முடியாது. அப்பகுதி மக்களின் நிலையையும், அவர்களின் கருத்துகளையும் ஒதுக்கிவிட முடியாது. இந்த விஷயத்தில் மக்களின் நலனே முக்கியம்' என கூறினர்.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் சி.எஸ். வைத்தியநாதன், "அரசு விதிக்கும் அனைத்து விதிகளையும் பின்பற்றத் தயாராக இருப்பதாக ஆலை நிர்வாகம் கூறுகிறது. ஆனால், ஏற்கெனவே மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வகுத்த விதிகளை ஆலை நிர்வாகம் மீறியிருக்கிறது. அதனால், அதற்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், ஆலை விவகாரத்தில் முடிவெடுக்க அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில்தான் அரசு முடிவு செய்தது' என வாதிட்டார்.

ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், ஆலையை மூடக் கோரும் பின்னணியில் இருப்பது ஒரு என்ஜிஓ. அது வெளிநாட்டு சதியுடன் செயல்பட்டது தெரியவந்ததால் அதன் அங்கீகாரத்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. தாமிரம் என்பது இந்தியாவின் எதிர்காலத்துக்கு மிகவும் அவசியம். அது கச்சா எண்ணெய் வளத்தைப் போன்றது. அதனால்தான் அதன் உற்பத்தியை முடக்க வெளிநாட்டு சதி நடக்கிறது. அதன் ஒரு பகுதியே இந்த ஆலை மூடல் போராட்டம்' என கூறினார்.

இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக் கழிவுகள்தான் பிரச்னை என்றால் அதை அகற்றுவது யார்? அந்த ஆலைக்கு பல கடுமையான நிபந்தனைகளை விதித்து அது இயங்க ஏன் அனுமதிக்கக் கூடாது' என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு மூத்த வழக்குரைஞர் வைத்தியநாதன், "கழிவுகளை ஆலைதான் அகற்ற வேண்டும். இல்லையென்றால் அதன் செலவில் அரசே கழிவுகளை அகற்றும்' என்று பதிலளித்தார். மேலும், "ஏற்கெனவே ஆலைக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில், மீண்டும் சில நிபந்தனைகள் விதித்தாலும் அதை ஆலை நிர்வாகம் பின்பற்றும் என நம்ப முடியாது' என்றும் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து, அனைவரது வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை மீண்டும் வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

பின்னணி: தூத்துக்குடியில் நடந்த கடுமையான போராட்டங்கள், அதன் காரணமாக எழுந்த வன்முறையைத் தொடர்ந்து கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகக் கூறி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 2018}ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது. அந்த நடவடிக்கையை 2020}ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்திருந்தது. அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்துள்ளது.

முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் வேதாந்தா குழுமம் தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை தேசிய சொத்து என்று குறிப்பிட்டு, பாதுகாப்பை கவனத்தில் கொண்டு ஆலையில் செயல்பாடுகளை மீண்டும் தொடங்குவதற்கான பரிந்துரைகளை வழங்க நிபுணர் குழுவை அமைக்க முன்மொழிந்தது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் நடந்த கடுமையான போராட்டங்கள் அதன் காரணமாக எழுந்த வன்முறையைத் தொடர்ந்து கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்துவதாகக் கூறி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டது.

இந்த நடவடிக்கையை கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உறுதி செய்திருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com