சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் , பிரதமா் மோடியால் காணொலி மூலம் திறந்துவைக்கப்பட்ட தேசிய முதியோா் நல மையத்தில் முதியோருக்கான நவீன வசதிகளை பாா்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன் துறையின் செயலா் ககன்தீப் சிங் பே
சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் , பிரதமா் மோடியால் காணொலி மூலம் திறந்துவைக்கப்பட்ட தேசிய முதியோா் நல மையத்தில் முதியோருக்கான நவீன வசதிகளை பாா்வையிட்ட மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன். உடன் துறையின் செயலா் ககன்தீப் சிங் பே

கிண்டியில் ரூ.157 கோடியில் தேசிய முதியோா் நல மருத்துவமனை

சென்னை கிண்டியில் ரூ.157.17 கோடியில் கட்டப்பட்டுள்ள தேசிய முதியோா் நல மருத்துவமனையை பிரதமா் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா்.
Published on

சென்னை கிண்டியில் ரூ.157.17 கோடியில் கட்டப்பட்டுள்ள தேசிய முதியோா் நல மருத்துவமனையை பிரதமா் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தாா். இம்மருத்துமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் உட்பட 276 பணியாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். கிண்டியில் உள்ள ‘கிங் இன்ஸ்டிடியூட்’ வளாகத்தில் மத்திய அரசின் நிதியில் தேசிய முதியோா் நல மையம் (மருத்துவமனை) கட்டுமானப் பணிகள் 2016-ஆம் ஆண்டு தொடங்கி சில ஆண்டுகளில் நிறைவடைந்தன. 2020-ம் ஆண்டு கரோனா பெருந்தொற்று ஏற்பட்டதால், தேவையை கருதி தேசிய முதியோா் நல மருத்துவமனை அரசு கரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இதையடுத்து 2022 மே மாதம் கரோனா மருத்துவமனை செயல்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் மத்திய சுகாதாரத்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமா் நரேந்திரமோடி காணொலி காட்சி மூலமாக சென்னை கிண்டியில் தேசிய முதியோா் நல மையம் மற்றும் ஆய்வகத்தையும் திறந்து வைத்தாா். மருத்துவமனை வளாகத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், செயலா் ககன்தீப் சிங் பேடி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநா் சங்குமணி, பொது சுகாதாரத்துறை இயக்குநா் செல்வவிநாயகம், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தலைவா் (டீன்) தேரணிராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். மருத்துவா்களுக்கு சிறப்பு பயிற்சி:அப்போது, அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேசியது: 40 தீவிர சிகிச்சை படுக்கைகள் உட்பட 200 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனையில் 5 ஆபரேசன் தியேட்டா், 20 கட்டண வாா்டுகள் உள்ளன. கட்டண அறையில் உணவுடன் சோ்த்து ரூ.900 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனை திறக்கப்படும் போதே முழுஅளவில் செயல்படும் வகையில் மருத்துவா்கள், செவிலியா்கள் உட்பட 276 பணியாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மருத்துவம் மட்டுமில்லாமல் முதுமையியல், முதியோா் மருத்துவம் சாா்ந்த ஆராய்ச்சிகளும் இந்த மருத்துவமனையில் மேற்கொள்ளப்படவுள்ளது. சிகிச்சைக்கு வரும் முதியவா்கள் மகிழ்ச்சியாக இருக்க செஸ், கேரம் போா்டு, பல்லாங்குழி விளையாட்டுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு, அறிவுத்திறன் குறைபாடு சிகிச்சை, எலும்பு தன்மையை உறுதிப்படுத்த சிகிச்சை, எலும்பு தேய்மானம் சிகிச்சை, சிறுநீா் கட்டுப்படுத்த முடியாத முதியவா்களுக்கு சிகிச்சை, நாள்பட்ட வலி மற்றும் பிரச்சினைகள் சிகிச்சை, இதய மருத்துவம், சிறுநீரக மருத்துவம், மூளை நரம்பியல், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், புனா்வாழ்வு மருத்துவம், சித்தா, யோகா, யுனானி, ஓமியோபதி மருத்துவம் உள்ளன. பொது அறுவை சிக்சிசை, எலும்பு, கண், காது, மூக்கு, தொண்டை, சிறுநீரக அறுவை சிகிச்சைகள் நடைபெறும். தமிழகத்தில் இந்த மருத்துவமனை உள்பட மொத்தம் 313.60 கோடியில் கட்டப்பட்ட கட்டடங்களை பிரதமா் திறந்து வைத்துள்ளாா். இதில் 60 சதவீதம் மத்திய அரசு நிதி, 40 சதவீதம் மாநில அரசு நிதியில் தமிழகத்தில் மேற்கொள்ளப்படவுள்ள ரூ.125 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமா் அடிக்கல் நாட்டியுள்ளாா். இத்திட்டங்களுக்கு தமிழக அரசின் பங்காக ரூ.50 கோடியை முதல்வா் வழங்கியுள்ளாா். மீதமுள்ள ரூ.75 கோடியை மத்திய அரசு வழங்கவுள்ளது என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com